

நற்றிணைப் பாடல் 212
பார்வை வேட்டுவன் படு வலை வெரீஇ,
நெடுங் கால் கணந்துள்அம் புலம்பு கொள் தௌ விளி
சுரம் செல் கோடியர் கதுமென இசைக்கும்
நரம்பொடு கொள்ளும் அத்தத்து ஆங்கண்
கடுங் குரற் பம்பைக் கத நாய் வடுகர்
நெடும் பெருங் குன்றம் நீந்தி, நம் வயின்
வந்தனர்; வாழி – தோழி! – கையதை
செம் பொன் கழல்தொடி நோக்கி, மா மகன்
கவவுக் கொள் இன் குரல் கேட்டொறும்,
அவவுக் கொள் மனத்தேம் ஆகிய நமக்கே.
பாடியவர்: குடவாயிற் கீரத்தனார்
திணை: பாலை
பொருள்:
தோழீ! பார்வை ஒன்றனை வைத்து வேட்டுவன் அமைத்த வலையைக் கண்டு வெருவி நெடிய காலையுடைய “கணந்துள்” என்னும் பறவை தான் தனிமையினிருந்து கத்தாநின்ற தெளிந்த ஓசை; அச்சுரத்தின் கண்ணே செல்லுகின்ற கூத்தாடிகள் தம் வழிவருத்தம் நீங்குமாறு தங்கி விரைவில் ஒலியெழுப்பி இசைபாடுகின்ற யாழோசையோடு சேர்ந்து ஒத்து ஒலியாநிற்கும் அரிய நெறியிலே; கடிய ஒலியையுடைய பம்பையையும் சினங்கொண்ட நாயையுமுடைய வடுகர் இருக்கின்ற நெடிய பெரிய குன்றங் கடந்து; நம்முடைய கையிலுள்ளதாகிய செம்பொன்னாற் செய்து பூட்டப்பட்டு இப்பொழுது கழன்று விழுகின்ற தொடியை நோக்கி; நம் (அரிய) சிறந்த புதல்வன் நம்மை அணைத்துக்கொண்டு அழுகின்ற இனிய குரலைக் கேட்குந் தோறும்; ஆசைகொள்ளுகின்ற மனத்தை யுடையேமாகிய நமக்கு மனமகிழச்சி உண்டாகும்படி; நம்மிடத்து வந்தெய்தினர் கண்டாய்! ஆதலின், இனி நீங்கள் இருவீரும் மனையறஞ் செய்துகொண்டு நெடுங்காலம் வாழ்வீராக!
