
நற்றிணைப் பாடல் 211:
யார்க்கு நொந்து உரைக்கோ யானே ஊர் கடல்
ஓதம் சென்ற உப்புடைச் செறுவில்,
கொடுங் கழி மருங்கின், இரை வேட்டு எழுந்த
கருங் கால் குருகின் கோள் உய்ந்து போகிய
முடங்கு புற இறவின் மோவாய் ஏற்றை,
எறி திரை தொகுத்த எக்கர் நெடுங் கோட்டுத்
துறு கடற் தலைய தோடு பொதி தாழை
வண்டு படு வான் போது வெரூஉம்
துறை கெழு கொண்கன் துறந்தனன் எனவே?
பாடியவர்: கோட்டியூர் நல்லந்தையார்
திணை: பாலை
பொருள்:
கடலலை ஊர்ந்து செல்லும் உப்புப் பாத்தியில் மேயும் இறா மீன், வளைந்த முதுகும், துருத்திய வாயும் கொண்ட இறா மீன், வலிமையான காலை ஊன்றி இரை தேடும் கொக்கின் பிடியிலிருந்து தப்பி வளைந்த உப்பங்கழிக்கு ஓடும். அங்கே எறியும் அலை தொகுத்த மணலில் நீண்டு வளர்ந்து பெரிதும் விரிந்த தலையுடன் கூடிய மடலுக்கு இடையே வண்டுகள் மொய்க்கும்படி பூத்திருக்கும் தாழம்பூவைப் பார்த்து, இதுவும் ஒரு கொக்கு என்று அஞ்சி நடுங்கும் துறையை உடையவன் இவள் காதலனாகிய கொண்கன். அவன் இவளை விட்டுப் பிரிந்துள்ளான் என்று நொந்துபோய் யாரிடம் சொல்வேன்? இவ்வாறு தோழி தலைவன் காதில் விழும்படிச் சொல்கிறாள்.
