நற்றிணைப் பாடல் 213:
அருவி ஆர்க்கும் பெரு வரை நண்ணி,
‘கன்று கால்யாத்த மன்றப் பலவின்
வேர்க் கொண்டு தூங்கும் கொழுஞ் சுளைப் பெரும் பழம்
குழவிச் சேதா மாந்தி, அயலது
வேய் பயில் இறும்பின் ஆம் அறல் பருகும்
பெருங் கல் வேலிச் சிறுகுடி யாது?’ என,
சொல்லவும் சொல்லீர்; ஆயின், கல்லென
கருவி மா மழை வீழ்ந்தென, எழுந்த
செங் கேழ் ஆடிய செழுங் குரற் சிறு தினைக்
கொய் புனம் காவலும் நுமதோ?
கோடு ஏந்து அல்குல், நீள் தோளீரே!
பாடியவர்: கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்
திணை: குறிஞ்சி
பொருள்:
பக்கம் உயர்ந்த அல்குலையும் பெருத்த தோளையுமுடைய சிறுமிகளே!; அருவியொலிக்கின்ற பெரிய மலையை யடைந்து! கன்று கால் யாத்த மன்றப் பலவின் வேர்க்கொண்டு தூங்குங் கொழுஞ்சுளைப் பெரும்பழம் ஆவினது இளங்கன்றைக் காலிலிட்ட கயிறு பிணித்த தழைந்த மன்றம் போன்ற பலாமரத்தின் வேரிலே காய்த்துத் தூங்காநின்ற கொழுவிய சுளையையுடைய பெரிய பழத்தை; அவ்விளங்கன்றையுடைய சிவந்த பசுவானது தின்று; பக்கத்திலுள்ளதாகிய மூங்கில் நெருங்கிய சிறுமலையின்கணுள்ள குளிர்ந்த நீரைப் பருகாநிற்கும்; பெரியமலையை அரணாகவுடைய நுமது சிறிய குடிதான் யாதோ என யான் வினவ அதற்கு விடையொன்று சொல்லுதலையுஞ் செய்திலீர்! ஆயினும் அதுகிடக்க; மின்னல் முதலாய தொகுதியையுடைய கரிய மேகம் கல்லென்னும் ஒலியோடு மழையைப் பெய்ததனாலே; விளைந்த சிவந்த நிறம் பொருந்திய செழுவிய கதிர்களையுடைய கொய்யத்தக்க இத்தினைப் புனங்காவலும் நும்முடையதுதானோ? இதனை யேனுங் கூறுங்கோள்;