யாயா கியளே விழவுமுத லாட்டி
பயறுபோ லிணர பைந்தாது படீஇயர்
உழவர் வாங்கிய கமழ்பூ மென்சினைக்
காஞ்சி யூரன் கொடுமை
கரந்தன ளாகலின் நாணிய வருமே.
பாடியவர்: ஓரம்போகியார்
திணை: மருதம்
பாடலின் பின்னணி:
பரத்தையோடு தொடர்பு காரணமாகத் தலைவியைப் பிரிந்து வாழ்ந்த தலைவன், இப்பொழுது தலைவியைக் காண வருகிறான். அங்கு, தலைவியின் தோழி வருகிறாள். தனக்காகத் தோழியைத் தலைவியிடம் தூது போகுமாறு தலைவன் வேண்டுகிறான். தலைவன் செய்த கொடுமைகளையும் தலைவியின் நற்பண்புகளையும் நன்கு அறிந்த தோழி, “தலைவன் செய்த கொடுமைகளை மறைத்த தலைவி, இப்பொழுது அவன் வெட்கப்படுமாறு அவனை ஏற்றுக் கொள்ளப்போகிறாள்” என்று தனக்குத் தானே கூறிக்கொண்டு தலைவியை நோக்கிச் செல்கிறாள்.
பாடலின் பொருள்:
தலைவன் செல்வம் பெற்று மகிழ்ச்சியாக இருப்பதற்கு முதல் காரணமாக இருப்பவள் தலைவி. தலைவனின் ஊரில் மெல்லிய கிளைகளை உடைய காஞ்சி மரங்கள் உள்ளன. அந்த மரங்களின் கிளைகளை உழவர்கள் வளைத்தால், பயற்றின் கொத்தைப்போல் இருக்கும் பூங்கொத்துக்களில் உள்ள பசுமையான பூந்தாதுகள் அவர்கள் மேல் படும்படி விழுகின்றன. அத்தகைய காஞ்சி மரங்களை உடைய ஊரனின் கொடுமைகளை யாருக்கும் தெரியாமல் தலைவி மறைத்தாள். இப்பொழுது, அவன் நாணும்படி அவனை ஏற்றுக்கொள்ள அவள் வருகிறாள்.