• Tue. Feb 18th, 2025

குறுந்தொகைப் பாடல் 7:

Byவிஷா

Jan 21, 2025

வில்லோன் காலன கழலே தொடியோள்
மெல்லடி மேலவும் சிலம்பே நல்லோர்
யார்கொல் அளியர் தாமே ஆரியர்
கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி
வாகை வெண்ணெற் றொலிக்கும்
வேய்பயில் அழுவம் முன்னி யோரே.

பாடியவர்: பெரும்பதுமனார்
திணை : பாலை
பாடலின் பின்னணி: ஒரு ஆடவனும் ஒரு பெண்ணும் காதலிக்கிறார்கள். அவர்கள் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார்கள். அவர்களின் பெற்றோர்கள் அவர்களுடைய திருமணத்திற்குச் சம்மதிக்கவில்லை. ஆகவே, அவர்கள் தங்கள் ஊரைவிட்டு, வறண்ட காட்டு வழியாக வேறு ஒரு ஊருக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள். வில்லேந்திய அந்த ஆடவனும்,மெல்லிய பாதங்களை உடைய அந்தப் பெண்ணும், துன்பப்பட்டு அந்தக் காட்டைக் கடந்து செல்வதைக் கண்ட சிலர் அவர்களுக்காக இரக்கப்படுகிறார்கள்.
உரை: ஆரியக்கூத்தர்கள் கயிற்றின் மேல் நின்று ஆடும் பொழுது கொட்டப்படும் பறையின் ஒலியைப் போல, காற்று தாக்குவதால் நிலை கலங்கி, வாகை மரத்தின் வெண்மையான நெற்றுக்கள் ஒலிக்கும் இடமாகிய மூங்கில் செறிந்த இந்த பாலை நிலப்பரப்பை, காலில் கழல் அணிந்த இந்த ஆடவனும் தோளில் வளையலும் தன்னுடைய மெல்லிய பாதங்களில் சிலம்பும் அணிந்த இந்தப் பெண்ணும் கடந்து செல்ல நினைக்கிறார்கள். இந்த நல்லவர்கள் யாரோ? இவர்கள் இரங்கத்தக்கவர்கள்!

விளக்கம்: சங்க காலத்தில், திருமணமாகாத பெண்கள் காலில் சிலம்பு அணிவதும், திருமணத்திற்குமுன் சிலம்பைக் கழட்டிவிடுவதும் வழக்கமாக இருந்தது. இப்பாடலில், பெண் தன்னுடைய காலில் சிலம்பு அணிந்திருப்பதாகப் புலவர் கூறியதால் அந்தப் பெண் திருமணம் ஆகாதவள் என்பது புலனாகிறது.

இந்தியாவின் வடபகுதிகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த சிலர் (ஆரியர்கள்) மூங்கில் கம்புகளின் இடையே கட்டப்பட்ட கயிற்றின்மேல் நடந்துகாட்டி மக்களை மகிழ்விக்கும் நிகழ்ச்சி கழைக்கூத்து என்று அழைக்கப்பட்டது. கழைக்கூத்து நடைபெறும்பொழுது பறைகொட்டி ஒலியெழுப்புவது வழக்கம். சிலப்பதிகாரத்திலும் கம்பராமாயணத்திலும் கழைக்கூத்தைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில், “ஆரியக்கூத்து ஆடினாலும் காரியத்தில் கண்” என்ற பழமொழி இன்றும் வழக்கில் உள்ளது.