கோடல் எதிர்முகைப் பசுவீ முல்லை
நாறிதழ்க் குவளையொ டிடையிடுபு விரைஇ
ஐதுதொடை மாண்ட கோதை போல
நறிய நல்லோள் மேனி
முறியினும் வாய்வது முயங்கற்கும் இனிதே.
பாடியவர்: சிறைக்குடி ஆந்தையார்
பாடலின் பின்னணி:
ஒரு ஆண்மகன் தற்செயலாக ஒரு பெண்ணைச் சந்திக்கிறான். முதல் சந்திப்பிலேயே அவர்கள் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவளுடைய அழகும், அவளிடத்திலிருந்த நறுமணமும் அவள் தளிர்போன்ற மேனியும் அவனை மிகவும் கவர்ந்தது. முதல்நாள் அவளைச் சந்தித்த இடத்திற்கே போனால் அவளை மீண்டும் சந்த்திக்கும் வாய்ப்பு இருக்கும் என்று எண்ணுகிறான். அதே இடத்திற்கே மீண்டும் செல்கிறான். அவள் வந்தால் அவளைத் தழுவ வேண்டும் என்று மிகுந்த ஆவலாக இருக்கிறான். அவளைத் தழுவுவதால் அவன் அடையப்போகும் இன்பத்தைக் கற்பனை செய்கிறான்.
பாடலின் பொருள்:
நெஞ்சே, காந்தள் மலரையும், அரும்பிலிருந்து தோன்றிய நல்ல முல்லைப்பூக்களையும், மணமுள்ள இதழ்களையுடைய குவளைமலர்களையும் இடையிடையே கலந்து, அழகாகத் தொடுக்கப்பட்ட அழகிய மாலையைப்போல நறுமணத்தை உடைய தலைவின் உடல், தளிரைக் காட்டிலும் மென்மையும் நிறமும் பொருந்தியது. அது தழுவுதற்கும் இனியது.




