நற்றிணைப் பாடல் 400:
வாழை மென் தோடு வார்புஉறுபு ஊக்கும்
நெல் விளை கழனி நேர் கண் செறுவின்,
அரிவனர் இட்ட சூட்டு அயல், பெரிய
இருஞ் சுவல் வாளை பிறழும் ஊர!
நினின்று அமைகுவென்ஆயின், இவண் நின்று,
இன்னா நோக்கமொடு எவன் பிழைப்பு உண்டோ?
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து,
அறம் கெட அறியாதாங்கு, சிறந்த
கேண்மையொடு அளைஇ, நீயே
கெடு அறியாய் என் நெஞ்சத்தானே.
பாடியவர்: ஆலங்குடி வங்கனார்
திணை: மருதம்
பொருள்:
நெல் விளைந்திருக்கும் வயலில் வாழைப்பூ இதழ்கள் பிடிப்பு விடுபட்டு விழும். அறுத்துக் கட்டி வைத்திருக்கும் நெற்கட்டுகளுக்கு அருகில் வாளைமீன் புரண்டு விளையாடும். இப்படிப்பட்ட நீர்வளம் மிக்க ஊரின் தலைவன் நீ. நீ இல்லாமல் நான் வாழ்வேனாயின், அது துன்பப் பார்வையாக இருக்கும். நீ இல்லாவிட்டால் என் பிழைப்புக்கு வழி ஏது? வீரம் மிக்க சோழ அரசர்களின் உறையூர் அவைக்களத்தில் அறநெறி தவறுவதைப் பார்க்க முடியாது. அது போல உன் நட்பைப் பெற்றிருக்கும் எனக்கு நீ கேடு செய்ய அறியாதவன். என் நெஞ்சத்திலும் வஞ்சனை இல்லை. பரத்தை தன்னை நாடி வந்த தலைவனிடம் இவ்வாறு கூறுகிறாள்.








