• Fri. Jan 24th, 2025

இலக்கியம்:

Byவிஷா

Jan 4, 2025

நற்றிணைப் பாடல் 399:

அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து,
குருதி ஒப்பின் கமழ் பூங் காந்தள்
வரி அணி சிறகின் வண்டு உண மலரும்
வாழை அம் சிலம்பில், கேழல் கெண்டிய
நிலவரை நிவந்த பல உறு திரு மணி
ஒளி திகழ் விளக்கத்து, ஈன்ற மடப் பிடி,
களிறு புறங்காப்ப, கன்றொடு வதியும்
மா மலை நாடன் நயந்தனன் வரூஉம்
பெருமை உடையள் என்பது
தருமோ தோழி! நின் திரு நுதல் கவினே?

பாடியவர்: தொல்கபிலர்
திணை: குறிஞ்சி

பொருள்:
அருவியொலி கேட்டுக்கொண்டடிருக்கும் பெருமலை அடுக்கத்தில் குருதி நிறம் கொண்ட செங்காந்தள் பூக்கள் அழகிய சிறகுகளை உடைய வண்டுகள் தேன் உண்ணும்படி மலரும். வழை மரம் மிக்க சோலையில் காட்டுப் பன்றி உழுத (கிழங்குக்காகக் கிண்டிய) நிலத்தின் புழுதியில் அழகிய மணிக்கற்கள் மேலெழுந்து கிடக்கும். அந்த மணிகள் தரும் விளக்கு வெளிச்சத்தில் கன்று போட்டிருக்கும் பெண்யானை தன் கன்றுடன் ஆண்யானை பாதுகாப்புடன் இருக்கும். இப்படிப்பட்ட பெருமலை நாட்டின் தலைவன் அவன். அவன் உன்னை விரும்பி வந்திருக்கிறான் என்னும் பெருமை உடையவள் நீ – என்றாள் தோழி. அவன் என்னை மணந்துகொண்டு வாடிக் கிடக்கும் நெற்றி (முகத்துக்கு ஆகுபெயர்) அழகை திரும்பத் தருவானோ – என்று தலைவி வினவுகிறாள். தொலைவில் கேட்டுக்கொண்டிருக்கும் தலைவன் மணந்து கொள்ள வேண்டும் என்பது கருத்து.