• Sun. Feb 9th, 2025

குறுந்தொகைப் பாடல் 18:

Byவிஷா

Feb 5, 2025

வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட செவ்வியை ஆகுமதி
யாரஃ தறிந்திசி னோரே சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே.

பாடியவர்: கபிலர்.
திணை: குறிஞ்சி

பாடலின் பின்னணி:
ஒருநாள் இரவு, தலைவன் தலைவியைக் காணவருகிறான். அவளோடு இருந்து, திரும்பிச் செல்லும் வழியில் தோழியைச் சந்திக்கிறான். தோழி, “தலைவியின் காதல் நோய் மிகவும் பெரிது. அவளால் அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆகவே, அவளை நீ விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டும்.” என்று தலைவனிடம் கூறுகிறாள்.
பாடலின் பொருள்:
மலை நாடனே! உன் நாட்டில், சிறு மூங்கில்களாலாகிய வேலி உள்ள இடத்தில், வேரிலே பழக்குலைகளை உடைய பலா மரங்கள் செறிந்திருக்கின்றன. மலைப்பக்கத்தில் உள்ள பலாமரத்தின் சிறிய கொம்பில், பெரிய பழம் தொங்கியது போல, இத்தலைவியினது, உயிரானது மிகச் சிறியது; ஆனால், இவள் காமநோய் மிகப் பெரிது; அதை அறிந்தவர் யார்? உன்னைத் தவிர வேறு ஒருவரும் இல்லை. ஆகவே, அவளைத் திருமணம் செய்துகொள்ளும் பருவத்தை உடையவனாகுக! அதாவது, விரைவில் அவளைத் திருமணம் செய்துகொள்வாயாக!