உள்ளார் கொல்லோ தோழி கள்வர்
பொன்புனை பகழி செப்பங் கொண்மார்
உகிர்நுதி புரட்டும் ஓசை போலச்
செங்காற் பல்லி தன்றுணை பயிரும்
அங்காற் கள்ளியங் காடிறந் தாரே
பாடியவர்: சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ
திணை: பாலை
பாடலின் பின்னணி:
பொருள் ஈட்டுவதற்காகத் தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். தன்னைவிட்டுப் பிரிந்த சென்ற தன் காதலன் தன்னை நினைத்துக் கொண்டிருப்பானோ அல்லது மறந்திருப்பானோ என்று தலைவி வருந்துகிறாள். “அவர் சென்ற வழியில் ஆண்பல்லி தன் துணையாகிய பெண்பல்லியை அழைப்பதைக் கேட்டவுடன் அவருக்கு உன் நினைவு வரும். அவர் விரைவில் மீண்டும் உன்னிடம் வருவார்.” என்று தலைவிக்குத் தோழி ஆறுதல் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
பாடலின் பொருள்:
தோழி, பாலை நிலத்தில் உள்ள வழிப்பறிக் கள்வர், இரும்பினால் செய்யப்பட்ட தம் அம்பை சுத்தம் செவதற்காக, அதை நக நுனியால் புரட்டுவதால் உண்டாகிய ஒலியைப் போல ஒலி எழுப்பும், சிவந்த கால்களை உடைய ஆண்பல்லியானது, தன் துணையாகிய பெண்பல்லியை அழைக்கும் இடமாகிய, அழகிய அடியை உடைய கள்ளிச் செடிகளோடு கூடிய பாலை நிலத்தைக் கடந்து (பொருள் தேடுவதற்காகச்) சென்ற தலைவர், என்னை நினைக்க மாட்டாரோ?