தங்களுக்கு வாக்களித்தால் மாநாடு படத்திற்கான டிக்கெட் இலவசமாக தரப்படும் என்று கோவையில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் உள்ள இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய, IYC என்ற பிரத்யேக செயலி மூலம் நவம்பர் 7 முதல் டிசம்பர் 7 வரை தேர்தல் நடைபெற்று வருகிறது.

இதில் 19 வயது முதல் 35 வயது வரையுள்ள கட்சியின் உறுப்பினராக இருப்பவர்கள் மட்டுமே வாக்களிக்க இயலும். கடந்த ஒரு மாதமாக செயலி மூலம் நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் , தேர்தல் நிறைவடைய சில தினங்கள் மட்டுமே இருக்கின்றன. இந்நிலையில் கோவையில் உள்ள இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் நூதன முறையில் இளைஞர்களை கட்சியில் சேர்த்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.
கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் முகாமிட்டுள்ள அக்கட்சியினர் மாநாடு படம் பார்க்க வரும் இளைஞர்களிடம் இலவசமாக டிக்கெட் கொடுப்பதாகவும் ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் மட்டும் கொண்டு வந்தால் போதும் என தெரிவிக்கின்றனர்.
அவற்றை கொண்டு வரும் இளைஞர்களை, காங்கிரஸ் கமிட்டியின் பிரத்யேக செயலி மூலம் ஆதார் கார்டு, ஒட்டுனர் உரிமம் போன்றவற்றை பயன்படுத்தி உறுப்பினராக்குகின்றனர்.
உறுப்பினராவதற்கு கட்டணமாக 50 ரூபாயினை அவர்களே செலுத்தி கொண்டுஅந்த செல்போனுக்கு வரும் OTP எண் மூலம் தங்கள் அணியினருக்கு வாக்குகளை செலுத்தி கொள்கின்றனர். பின்னர் அடையாள அட்டை கொண்டு வந்த இளைஞர்களுக்கு “மாநாடு” திரைப்பட டிக்கெட்டை இலவசமாக கொடுத்து அனுப்புகின்றனர்.இந்த காட்சிகளை அந்த திரையரங்கிற்கு சென்ற நபர் செல்போனில் பதிவு செய்து வெளியிட்ட நிலையில் அந்த காட்சிகள் வைரலாக பரவி வருகின்றது. முறைகேடுகள் நடைபெறுவதை தவிர்க்க பிரத்யேக செயலி மூலம் அக்கட்சி ஏற்பாடு செய்திருந்தாலும், இலவச சினிமா டிக்கெட் ஆசை காட்டி, நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.