• Tue. Dec 10th, 2024

கல்வெட்டில் பெயர் போட்டால் பொதுச்செயலாளராகிவிட முடியாது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…

Byமதி

Oct 17, 2021

அதிமுக கட்சி தொடங்கி இன்று 50ஆவது ஆண்டில் அடிவைக்கிறது. எனவே, அதிமுக சார்பில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், அதிமுக பொன்விழாவையொட்டி சசிகலா எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், சசிகலாவின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றையும் திறந்து வைத்தார்.

இதுகுறித்து, சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”நீதிமன்றம் நாங்கள் தான் உண்மையான அதிமுக என்று கூறியுள்ளது. இன்று சசிகலா செய்துள்ளது நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரானது. சசிகலா என்ன தியாகம் செய்தார். தியாகத்தலைவி என பெயர் சூட்டிக்கொள்ள?. பெங்களூர் சிறையிலிருந்து வந்த பிறகு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்து மரியாதை ஏன் செலுத்தவில்லை. பொன்விழா ஒற்றுமையுடன் கொண்டாடப்படுவது அவருக்கு பிடிக்கவில்லை.

வானத்திலிருந்து குதித்த அவதாரம் போல நான் தான் புரட்சித்தாய் என்று சொல்வதை எப்படி ஏற்க முடியும். ஜெயலலிதாவைத் தவிர யாரும் புரட்சியை சொந்தம் கொண்டாட முடியாது. ஜெயலலிதா மட்டும்தான் கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர். அவரைத்தவிர யாரும் பொதுச்செயலாளராக முடியாது”என்றார்.