

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு மிஸ்டர் லோக்கல் திரைப்படம் வெளியானது. அந்த படத்தில் தனக்கு பேசப்பட்ட சம்பளத்தில் ரூ.4 கோடி பாக்கி இருப்பதாக சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் வழக்கு தொடர்ந்த நிலையில், சிவகார்த்திகேயன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மிஸ்டர் லோக்கல் படத்தின் கதை தனக்கு பிடிக்கவில்லை எனவும் அந்த படத்தின் இயக்குநராக ராஜேஷ் தான் வேண்டுமென சிவகார்த்திகேயன் கட்டாயப்படுத்தியதால் தான் அந்த படம் தயாரிக்கப்பட்டதாகவும் அந்த படத்தால் தனக்கு 20 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளார்.
மிஸ்டர் லோக்கல் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்திற்காக விநியோகஸ்தர்கள் தரப்பில் நெருக்கடி கொடுத்த நிலையில், 2 கோடியே 40 லட்சம் தர வேண்டாம் எனவும், வினியோகஸ்தர்கள் பிரச்னையில் சிக்க வைத்து விட வேண்டாம் என சிவகார்த்திகேயன் கூறியதாகவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பதில்மனுவில் தெரிவித்துள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்கு பின்னர், உண்மை தகவல்களை மறைத்து தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்துள்ள மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கோரியுள்ளார். ஞானவேல்ராஜா தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் பதில் மனு தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 7ஆம் தேதிக்கு நீதிபதி எம்.சுந்தர் தள்ளிவைத்துள்ளார்.
