• Wed. Apr 23rd, 2025

சென்னை வானிலை ஆய்வு மைய இணையதளத்தில் இந்தி மொழி சேர்ப்பு

Byவிஷா

Mar 27, 2025

சென்னை வானிலை ஆராய்ச்சி மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்தி மொழியும் இடம் பெற்றுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்திய மாநிலங்களில் முதன்முறையாக தமிழ்நாட்டில் இந்தியுடன் சேர்த்து மும்மொழியில் வானிலை அறிக்கை வெளியாகியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் மூன்றாவது மொழியாக இந்தி சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் வானிலை நிலவரத்தை இந்தி மொழியிலும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலத்தில் மட்டுமே வானிலை அறிக்கைகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது இந்தியிலும் வானிலை அறிக்கைகள் வெளியாக தொடங்கியுள்ளன.
தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை சார்ந்தும், இந்தி மொழி சார்ந்தும் பல்வேறு சர்ச்சைகள் வெடித்து வரும் நிலையில், வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்தி மொழி சேர்க்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் என்பது தனி இணையதளத்தை கொண்டிருந்தது. ஆனால், தற்போது இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இணையதளமும், சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இணையதளமும் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த இந்தி மொழி எங்கு மாற்றப்பட்டது என்பது குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை.