கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் தனது செல்போனில் தனுஷ் படத்தின் போலீஸ் காட்சி குறித்து ஸ்டேட்டஸ் வைத்ததற்கு கோவை போத்தனூர் காவல் உதவி ஆய்வாளர் இளைஞரை வாட்ஸ்அப் காலில் அழைத்து மிரட்டிய சம்பவம் குறித்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் வசித்துவரும் நவீன் பிரசாத் மற்றும் அவரது நண்பர்கள் கடந்த 22ஆம் தேதி நண்பரின் பிறந்த நாளுக்காக கேக் வெட்ட காத்திருந்தனர். அப்போது Patrol ரோந்து வாகனத்தில் வந்த போலீசார் பொது இடத்தில் வைத்து கேக் வெட்டக் கூடாது. வீட்டுக்குப் போக முடியாதா என தெரிவித்துள்ளார். இதற்கு அந்த இளைஞர்கள் பதில் பேச போலீசாருக்கும் இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இளைஞர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து நவீன் பிரசாத் என்ற இளைஞர் தனுஷ் பட வசனத்தின் ஸ்டேட்டஸை தனது செல்போனில் வைத்துள்ளார்.
அந்த வசனத்தில்.. போய் அந்த போலீஸ்காரண்ட்ட சொல்லு.. நான் இங்கதான் இருப்பேன்னு..இந்த ஏரியாவே அவன் கண்ட்ரோல்ல இருக்கலாம்.. ஆனா மாறி எப்பவுமே அவுட் ஆப் கண்ட்ரோல்.. என மாரி பட டயலாக்கை வைத்துள்ளார். இதைப் பார்த்த நவீன் பிரசாத்தின் தொடர்பில் இருந்த நபர் சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆய்வாளருக்கு தகவல் தெரிவித்து ஆதாரத்தை அனுப்பியுள்ளார்.
இதைக் கண்டு கோபம் அடைந்த உதவி ஆய்வாளர் சையத் அலி உடனடியாக நவீன் பிரசாத் வாட்சப் எண்ணிற்கு வாட்ஸ்அப் கால் செய்துள்ளார்.தொடர்ந்தவர் உன் ஏரியாவுக்கு வருகிறேன்.. வாடா நீ என தெரிவித்து கெட்ட வார்த்தையில் மிரட்டியுள்ளார்.
அப்போது நவீன் பிரசாத் நீங்கள் யார் எனக் கேட்டபோது.. எஸ்.ஐ..டா என தெரிவித்துள்ளார்..இவை அனைத்தையும் நவீன் பிரசாத்தின் நண்பர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். நவீன் பிரசாத் அச்சத்தில் சாணி பவுடர் குடித்து சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.