• Fri. Apr 19th, 2024

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி: சென்னையில் முதல்வர் நேரில் ஆய்வு

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
சென்னையை பொறுத்தவரை பெருநகர் மற்றும் புறநகர் பகுதியில் தினமும் காலை தொடங்கி இரவு வரை மழை வெளுத்து வாங்கி வருகிறது. புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களிலும் விடியவிடிய மழை பெய்து வருகிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. சென்னை மாநகர் பொறுத்தவரை முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கைகளை பெருநகர சென்னை மாநகராட்சி மேற்கொண்டாலும் சில இடங்களில் இன்னமும் தண்ணீர் தேங்கி நிற்பதை பார்க்க முடிகிறது. இவற்றை மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த பணிகளை மாநகராட்சி அதிகாரிகளும், ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்திலேயே அதிக அளவாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 122 ஆண்டுகளில் இல்லாத மழை அளவாக 44 செ.மீ. அதி கனமழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் தண்ணீரில் சீர்காழி மிதக்கிறது. மேலும் மின்வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதால் சீர்காழி இருளில் மூழ்கி உள்ளது.
எனவே மின் வினியோகம் செய்வதற்காக பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் பார்வையிட்டு மின் வினியோக பணிகளை முடுக்கிவிட்டு வருகிறார்.
இதற்கிடையே சென்னையில் நேற்று காலை திடீரென கனமழை பெய்தது. பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் போன்ற புறநகர் பகுதிகளிலும் இந்த மழை நீடித்தது. ஆனால் பிற்பகலில் மழை ஓய்ந்து வெயில் தலைகாட்ட தொடங்கியது. மாலையில் சில இடங்களில் அவ்வப்போது சாரல் மழை பெய்தது.
இதற்கிடையே சென்னை திரு.வி.க. நகர் மற்றும் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை காரணமாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரடியாக பார்வையிட்டு, ஆய்வு செய்து பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் பெருநகர சென்னை மாநகராட்சி 6-வது மண்டல அலுவலகத்தில், ஆற்றங்கரை மற்றும் நீர்நிலைகளின் அருகில் வசிக்கும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கொசு வலைகளை அவர் வழங்கினார். மேலும், ஓட்டேரி நல்லா கால்வாயில் மழைநீர் தங்கு தடையின்றி செல்வதை ஸ்ட்ரான்ஸ் சாலை சந்திப்பு மேம்பாலத்தில் இருந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, ஸ்டீபன்சன் சாலையில் மேம்பால பணியின் காரணமாக தேங்கியுள்ள மழை நீரை மோட்டார் பம்புகள் மூலம் ஓட்டேரி நல்லா கால்வாயில் வெளியேற்றப்படும் பணிகளையும், கொசஸ்தலை வடிநிலப் பகுதி ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டத்தின் கீழ் ரூ.60 கோடி மதிப்பீட்டில் 16 கி.மீ. நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் பணிகளில் பல்லவன் சாலை, டான்பாஸ்கோ பள்ளி அருகே செல்லும் மழைநீர் வடிகால் பணிகளையும், பல்லவன் சாலை ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் மழை நீர் வெளியேற்றும் பணிகளையும் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:- மழை பெய்யும்பொழுது மழை நீர் இருந்திருக்கும். அதன் பிறகு மழை நீர் வடிந்து விடுகிறது. கனமழையை எதிர்பார்த்துதான் பணிகளை செய்து கொண்டிருக்கிறோம். எந்த ஆபத்துக்களும் வருவதற்கு வாய்ப்பே கிடையாது. அனைத்து அரசு துறைகளும் ஒருங்கிணைந்து, மாநகராட்சி, குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை என அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து, சிறப்பான பணியினை செய்து வருகிறார்கள். எதிர்க்கட்சிகள் தான் விமர்சனம் செய்கிறது. பொதுமக்கள் பாராட்டுகிறார்கள். அதுவே எங்களுக்கு போதும். இவ்வாறு அவர் கூறினார். சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லும் மு.க.ஸ்டாலின், சிதம்பரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை இன்று காலை நேரில் பார்வையிடுகிறார். பின்னர் அவர் அங்கிருந்து சீர்காழி செல்கிறார். அங்கு மழை பாதிப்புகளையும், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *