மாண்டஸ் புயல் காரணமாக நேற்று மாமல்லபுரம், கல்பாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான புதுப்பட்டினம், உய்யாலிகுப்பம் பகுதிகளில் பலத்த கடல் சீற்றம் காணப்பட்டது. நேற்று கடல் அலைகள் 8 அடி உயரத்துக்கு சீறி எழுந்தது. மாமல்லபுரத்தில் கடல் அலைகள் கரைப்பகுதி வரை 13 மீட்டர் தூரம் வரை முன்னோக்கி ஆர்ப்பரித்து வந்தன. புயலால் பலத்த காற்று வீசும்போது சாலையில் முறிந்து விழும் மரங்களையும், மின் கம்பங்களையும் எப்படி அப்புறப்படுத்துவது என்பது குறித்து செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் முன்னிலையில் அரக்கோணத்தில் இருந்து வந்த பேரிடர் வீரர்கள் விளக்கி கூறினர்.
தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பேரிடர் மீட்பு கருவிகளையும் எப்படி பயன்படுத்துவது என்பது குறித்தும் விளக்கினர். புயலால் பலத்த மழை பெய்யும் நிலையில் தண்ணீர் சூழ்ந்த வீடுகளில் சிக்கும் நபர்களை ரப்பர் படகு மூலம் மீட்டு வந்து எப்படி முதலுதவி சிகிச்சை அளித்து அவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வது போன்ற நிகழ்வுகளையும் விளக்கி கூறினர். மாமல்லபுரம் கடற்கரையில் பலத்த காற்று வீசியால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.