2011ஆம் ஆண்டு இயக்குநர் பாலா இயக்கத்தில், ஆர்யா, விஷால் நடித்து வெளியான திரைப்படமான “அவன் இவன்” வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப்படத்தில் ஜனனி அய்யர், அம்பிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் குறித்தும், சொரிமுத்து அய்யனார் கோயில் குறித்தும் தரக்குறைவாக விமர்சித்ததாக கூறி இயக்குநர் பாலா, நடிகர் ஆர்யா மற்றும் தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.அகோரம் ஆகியோர் மீது சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதியின் மகன் சங்கர் ஆத்மஜன் உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை நடத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தடைவாங்கிய நிலையில், அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தடை காலம் முடிந்து வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இவ்வழக்கு விசாரணைக்கு இயக்குநர் பாலா நேரில் ஆஜரான நிலையில் ஆர்யா நேரில் ஆஜராகவில்லை என்பதால் அடுத்த வாய்தாவில் ஆர்யா கண்டிப்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டதையடுத்து நேரில் ஆஜரானார் ஆர்யா.
ஆனால் நடிகர் ஆர்யா தரப்பில் படத்தில் இடம்பெற்ற காட்சிகளுக்கு வருத்தம் தெரிவித்ததால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இவ்வழக்கின் விசாரணைக்கு இயக்குனர் பாலா இன்று நேரில் ஆஜரான நிலையில் இந்த வழக்கின் மனுதாரர் குற்றத்தை முறையாக நிரூபணம் செய்யாததால், இயக்குனர் பாலாவை வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவதாக அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
31-வது ராஜவாக இருந்து வந்த முருகதாஸ் தீர்த்தபதி 2020 ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி முதிர்வின் காரணமாக காலமானார். இந்தியாவில் ஜமீன் முறை ஒழிக்கப்பட்டதற்கு முன்பே முருகதாஸ் தீர்த்தபதி பதவி ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.