• Sat. Apr 27th, 2024

‘வாய் தவறி தப்பா பேசிட்டேன்’… நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு கதறும் மீரா மிதுன்…!

By

Aug 18, 2021

வன்கொடுமை தடை சட்ட வழக்கில் கைதான நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது  நண்பர் ஜாமீன் கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

நடிகை மீராமிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட  7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

கடந்த 11ம் தேதி மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகும்படி மீரா மீதுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகாமல் கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக், கடந்த 14 ம் தேதி  கைது செய்யப்பட்டனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஜாமீன் வழங்க கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மீராமிதுன் மனுதாக்கல் செய்துள்ளனர்.

 அதில், தன்னைப் பற்றி அவதூறாக செய்தி பரப்பியதால் ஏற்பட்ட மன உளைச்சலால், கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேசிய போது, வாய் தவறி குறிப்பிட்ட  சமுதாயத்தை பற்றி பேசியதாகவும், தான் பேசியது தவறு என தெரிந்ததும், தான் பேசியது தவறு என குறிப்பிட்டதாகவும் மீரா மிதுன் தெரிவித்துள்ளார். ஆனால், தான் சொல்லாத வார்த்தைகளை பேசியதாக  புகார் அளித்தவர்கள் குறிப்பிட்டுள்ளதாகவும், பட்டியலின மக்களோடு தான் நட்புடன் இருப்பதாகவும்  தெரிவித்துள்ளார்.

பல படங்களில் நடிப்பதற்கு கால்ஷீட் கொடுத்துள்ள நிலையில் தன்னை சிறையில் அடைத்துள்ளதால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளார். நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவதாகவும், சாட்சிகளை கலைக்க மாட்டேன் எனவும் மனுவில் உத்தரவாதம் அளித்துள்ளார். இந்த மனு சென்னை முதன்னை அமர்வு நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *