சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், விஜயதசமி தினமான நேற்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது..,
இன்று விஜயதசமி. வெற்றிக்குரிய திருநாள். பாரத தேசத்தில் பெரும்பான்மை சமூகத்தினரை காயப்படுத்துவதற்குப் பெயர் பகுத்தறிவு. பார்வேர்டு லுக்கிங். அந்த மாதிரியான பிற்போக்குச் சிந்தனை, மூடநம்பிக்கை தமிழ்நாட்டில் இருக்கிறது.
இப்படியான ஒரு காலகட்டத்தில் நாட்டின் பிரதமரும், ராணுவ அமைச்சர்களும், ராணுவத் தளவாடங்களுக்குப் பூஜை செய்தது பெருமையளிக்கிறது. மற்ற மாநிலங்களில் அனைத்து நாட்களிலும் கோயில்கள் திறந்திருக்கும். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் பிடிவாதமாக இருக்கின்றனர். ஏன் வெள்ளி, சனி, ஞாயிறு கோவிலைத் திறக்கவில்லை என்று கேட்டால், அறநிலையத்துறை அமைச்சர் டெல்லில போய் லெட்டர் வாங்க வேண்டும் என்று சொல்கிறார்.
நம்ம டெல்லியில போய்லாம் லெட்டர் வாங்க வேண்டாம், காளிகாம்பாள் கோயில்லயும், பழனி முருகன் கோயில்லயும், ஸ்ரீரங்கம் ரங்கநாதனிடமும் முறையிட்டு அங்கு போராட்டம் நடத்தினாலே போதும் என்பது தெரிந்து விட்டது. டெல்லியில போய்லாம் லெட்டர் வாங்கவில்லை. ஆனால், எல்லா வழிபாட்டுத் தலங்களும் இன்றிலிருந்து எல்லா நாட்களும் திறந்திருக்கும் என்று அறிவித்ததற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், இந்து சமய அறநிலையத்துறையினுடைய அராஜகப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
நேற்றைய தினம் அமைச்சர் சேகர்பாபு தொகுதியில் இருக்கும் காளிகாம்பாள் கோயிலில் நவராத்திரி ஹோமம் நடைபெறும் போது, ஜே.சி.ஹரிப்பிரியா அவர்கள் ஹோமத்தில் இருந்த பக்தர்களை விரட்டி விட்டிருக்கிறார். நான் ஒவ்வொரு முறையும் சொல்லி வருகிறேன். அறநிலையத்துறை அதிகாரிகள் கோயிலுக்கு உள்ளேயே வரக்கூடாது. வெளியில்தான் இருக்க வேண்டும். ஏனென்றால், நிதி நிர்வாகம் மட்டும்தான் உங்களுடைய பொறுப்பு.
கோயில் பூஜை புனஸ்காரங்களில் தலையிடுவதற்கு அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை. அறநிலையத்துறை அமைச்சருக்கும் அதிகாரம் கிடையாது. முதலமைச்சருக்கும் அதிகாரம் கிடையாது. ஆனால், தமிழ்நாட்டு இந்து கோயில்களில் அத்துமீறி அறநிலையத்துறை அதிகாரிகள் நுழைகின்றனர். என்ன நினைக்கிறாங்கன்னா, இவங்கதான் எஜமான்னு நினைக்கிறாங்க. கோயில்களில் அர்ச்சகர்களையும் மரியாதையாக நடத்துவதில்லை அறநிலையத்துறை அதிகாரிகள். பக்தர்களையும் மரியாதையாக நடத்துவதில்லை.
நாளை மக்கள் கொந்தளித்து உங்களுக்கு எதிராக களத்தில் இறங்கக் கூடிய நிலையை திருமதி.ஹரிப்பிரியா போன்றவர்கள் உருவாக்க வேண்டாம் என்று எச்சரிக்க விரும்புகிறேன். முதலமைச்சர் அவர்கள் சி.எஸ்.ஐ மீட்டிங் போனார். சி.எஸ்.ஐ என்றால் சர்ச் ஆப் சவுத் இன்டியா. அந்தக்கூட்டத்தில் போய், இப்போ நடப்பது உங்கள் ஆட்சி என்று சொல்லியிருக்கிறார்.
அதனால் அவர்களெல்லாம் என்ன நினைத்து விட்டார்கள் இந்துக்களுக்கு எதிராக சிலுவைப் போர் நடத்தலாம் என்று. காஞ்சிபுரத்தில் ஆன்டர்சன் பள்ளியில், ஜாக்சன் என்ற ஒரு ஆசிரியர் ருத்திராட்சமும், திருநீறும் அணிந்து வந்த இரண்டு மாணவர்களை நிறுத்தி, ருத்ராட்சம்லாம் ரவுடிகள் போடுவது என்று கூறியிருக்கிறார். இதே ஒரு இந்து பள்ளிக்கூடத்தில் சிலுவை போட்டு வந்த மாணவனிடம் சிலுவையைக் கழட்டி இருந்தால் ஊடகம் சும்மா இருந்திருக்குமா? அலறியிருப்பார்கள். அதுதான் எனக்குப் புரியவில்லை. இவர்களெல்லாம் யாரிடம் காசு வாங்கி டிபேட் நடத்தினார்கள்.
நானும் பலவிதமாகச் சொல்லி விட்டேன். திருந்துற மாதிரி தெரியவில்லை. ஊடகத்துக்கு ஊடக தர்மம் என்னவென்றால், செய்திகளைப் பாரபட்சமில்லாமல் சொல்வது அவர்களின் கடமை. மனித தர்மமே இல்லாதவர் அந்த ஆசிரியர் ஜாக்சன். அவர் உடனடியாக சஸ்பென்ட் செய்யப்பட வேண்டும். ஏனென்றால், அந்த இரண்டு மாணவர்களுடைய பெற்றேர்களும் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள். இல்லையென்றால் முதலமைச்சர் ஒன்னு உத்தரவு இட வேண்டும்.
அந்த ஆசிரியர், அந்த இரண்டு மாணவனை எல்லா மாணவர்களையும் குட்டச் சொல்லி வன்முறையில் ஈடுபட்டிருக்கிறார். நீங்கள் அந்த ஆசிரியரை சஸ்பென்ட் செய்யவில்லையென்றால், மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து அந்த ஆசிரியரை பொதுமக்கள் கூடும் இடத்தில் குட்ட வேண்டும். இது ஒரு அயோக்கியத்தனம். அரசு அதிகாரிகள் என்ன மதத்தைச் சேர்ந்தவர்கள், ஆசிரியர்கள் என்ன மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று நான் கலெக்ட் செய்து கொண்டுதான் இருக்கிறேன்.
ஈரோடு மாவட்டம், கடம்பனூர் ஒன்றியத்தில் மலைக்கோயிலில் போய் சிலுவை போட்ட கிறிஸ்தவ குண்டர்கள் கோயிலை சிதைத்திருக்கின்றனர். அது இந்து மதத்திற்கு எதிராக தமிழகத்தில் ஸ்டாலின் வந்த பிறகு கிறிஸ்தவ மதவெறியர்களுக்கு ஒரு துணிச்சல் வந்திருக்கிறது. எந்த அளவுக்கு என்றால், ஜார்ஜ்பொன்னையா கூட சொன்னார். நான் போட்ட பிச்சைதானடா என்று. நான் கற்பனையில் சொல்லவில்லை. நடந்த விஷயத்தை சொல்கிறேன்.
மேலும், அறநிலையத்துறை அமைச்சர் என்னைப் பற்றி தனிப்பட்ட முறையில் பேசினால், அவர் பற்றி ஏராளமான தகவல்களை வெளியிட வேண்டி வரும் என்று எச்சரிக்கை செய்தார்.