• Thu. Apr 25th, 2024

அதிமுக கொடி பொருத்திய காரில், ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று கண்ணீர் மல்க சசிகலா அஞ்சலி!..

Byமதி

Oct 16, 2021

அதிமுகவின் 50-வது ஆண்டு தொடக்க விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்றைய தினம் அதிமுக கொடி பொருத்திய காரில், ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளார் சசிகலா.பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் சசிகலாவிற்கு உணர்ச்சி மிகு வரவேற்பு அளித்தனர்.

கடந்த பிப்ரவரி 14ம் தேதி சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறைத் தண்டனையை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உறுதி செய்தது. இந்த வழக்கில் சசிகலா சரணடைய பெங்களூரு புறப்படும் முன்னதாக ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி, சமாதியில் கையால் அறைந்து சபதமும் எடுத்துக் கொண்டார். அதைத்தொடர்ந்து பெங்களூரு சென்ற சசிகலா பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்றார்.

சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்த பின் ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்வது இதுவே முதல்முறையாகும். பின் சிறையிலிருந்து வெளிவந்த பின் தமிழ்நாட்டு அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதாக சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் அறிவித்த சசிகலா, பின்னர் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு அரசியலுக்கு வருவது குறித்து ஆதரவாளர்களிடம் தொலைபேசியில் பேசி வந்தார்.

இந்நிலையில் இன்று பல ஆண்டுகள் கழித்து ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீருடன் மரியாதை செலுத்தினார். சசிகலாவை ஏராளமான தொண்டர்கள் நெகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அதிமுக பொதுச்செயலாளர் சின்னம்மா என்று உணர்ச்சி பொங்க முழக்கமிட்டனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார் அவர், இத்தனை ஆண்டுகளாக மனதில் இருந்த பாரத்தை ஜெயலலிதா நினைவிடத்தில் இறக்கி வைத்துள்ளேன். அதிமுகவையும், தொண்டர்களையும் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் காப்பாற்றுவார்கள் என நம்புகிறேன். ஜெயல‌லிதா நினைவிடத்திற்கு நான் வந்த‌தற்கான காரணம் அனைவருக்கும் தெரியும். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா தமிழக மக்களுக்காகவே வாழ்ந்தனர்” என்றார்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *