மூன்று நாட்கள் நடைபெற்ற ஊரக பகுதிகளுக்கான மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்களில் 1,583 பயனாளிகளுக்கு ரூ.11.83 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் மற்றும் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆகியோர் வழங்கினார்கள்.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆகியோர் குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எழுமூர், பரவாய், வயலப்பாடி, கீழப்பெரம்பலூர், அத்தியூர் ஆகிய ஊராட்சிகளில் ஊரக பகுதிகளுக்கான மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் இன்று (31.01.2025) தொடங்கி வைத்து, 522 பயனாளிகளுக்கு ரூ.4.17 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். இந்நிகழ்வுகளில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்வில், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது..,
தமிழ்நாடு முதலமைச்சர் மக்களுடன் முதல்வர் முகாம்களில் கலந்துகொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய அறிவுறுத்தியுள்ளார்கள். அதற்காக எந்தெந்த ஊராட்சிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்ற விபரத்தினையும் தெரிவித்துள்ளார்கள். அந்த வகையில் எழுமூர், பரவாய், வயலப்பாடி, கீழப்பெரம்பலூர், அத்தியூர் ஆகிய கிராமங்களில் நடைபெறும் மக்களுடன் முதல்வர் முகாமில் இன்று கலந்து கொண்டுள்ளேன். மக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதற்கான வாய்ப்பினை வழங்கியமைக்காக சம்பந்தப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பாகவும், என் சார்பாகவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்நாடு முதலமைச்சர் மக்களுடன் முதல்வர் திட்டத்தினை கொண்டு வந்ததன் நோக்கம் விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், கடைக்கோடியில் வசிப்பவர்கள், ஆதிதிராவிட மக்கள், வறுமை நிலையில் உள்ள விளிம்பு நிலை மக்களுக்கு அரசினால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்களும் சென்று சேர வேண்டும் என்பதே ஆகும். பல்வேறு காரணங்களினால் நீண்ட நாட்களாக பட்டா மாறுதல் செய்ய முடியாமல் இருப்பது உள்ளிட்ட அடிப்படை தேவைகள் தொடர்பான பொதுமக்களின் கோரிக்கையினை தீர்த்து வைக்க இந்த முகாம் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.
முதியோர் உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்டோருக்கான உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவித்தொகை வேண்டி பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக வழங்கினால் குறைந்தபட்சம் ஒருவார காலத்திற்குள், அதிகபட்சம் 30 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுத்து, மனுதாரரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.
தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000, புதுமைப் பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில், அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,750 உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வாய்ந்த திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். இத்திட்டங்களை மாணவ, மாணவியர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதிக்குட்பட்ட இடங்களில் நடைபெறும். மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் தொடர்பாக மனு கொடுத்து இந்த முகாமினை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் இவ்வாறு தெரிவித்தார்.
போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:
பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று அலைந்து சிரமப்படுவதை தவிர்க்கும் வகையில் மாவட்ட நிர்வாகமே மக்களைத் தேடி வந்து குறைகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்திடும் வகையில் மக்களுடன் முதல்வர் முகாம் திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தியுள்ளார்கள். தமிழகம் முழுவதும் மக்களுடன் முதல்வர் முகாம் தற்போது மூன்றாம் கட்டமாக நடைபெற்று வருகிறது.
29.01.2025 அன்று மேலப்புலியூர், தேவையூர், கை.களத்தூர், நூத்தப்பூர், வெங்கலம் ஆகிய ஊராட்சிகளிலும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 30.01.2025 அன்று திருமாந்துறை, கீழப்புலியூர், நமையூர், வேப்பூர், நல்லறிக்கை ஆகிய ஊராட்சிகளிலும், இன்று (31.01.2025) எழுமூர், பரவாய், வயலப்பாடி, கீழப்பெரம்பலூர், அத்தியூர் ஆகிய ஊராட்சிகளிலும் மக்களுடன் முதல்வர் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் பொதுமக்களின் கோரிக்கைகள் தொடர்பாக பெறப்படும் அனைத்து மனுக்களும் உரிய முறையில் விசாரணை செய்து மிக விரைவில் அதற்குண்டான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மருத்துவர்கள் நோயாளிகளைத் தேடி வரும் வகையிலான “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டம், கொரோனா காலகட்டத்தில் கல்வி கற்க முடியாமல் இருந்த குழந்தைகளின் திறனை மீண்டும் சீர் செய்யும் வகையில் “இல்லம் தேடி கல்வி” திட்டம், அதேபோல தற்போது மக்களுடன் முதல்வர் போன்ற திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார்கள்.
மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து அதனை நிவர்த்தி செய்கின்ற முதலமைச்சராக திகழ்ந்து வருகிறார்கள். எப்போதும் மக்கள் நலனையே சிந்திக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நீங்கள் எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டும் இவ்வாறு தெரிவித்தார்.

இன்று குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எழுமூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் 147 நபர்களுக்கு ரூ.1,27,27,026 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், பரவாய் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற முகாமில் 90 நபர்களுக்கு ரூ.51,16,353 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், வயலப்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் 77 நபர்களுக்கு ரூ.61,70,270 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், கீழப்பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் 127 நபர்களுக்கு ரூ.1,16,48,470 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், அத்தியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் 81 நபர்களுக்கு ரூ.60,51,370 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் என மொத்தம் 522 பயனாளிகளுக்கு வருவாய்த்துறையின் மூலம் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், சமூகநலத்துறையின் மூலம் தாலிக்கு தங்கம், தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், தோட்டக்கலைத்துறையின் மூலம் வெங்காயக் கொட்டகை அமைக்க ஆணைகள், வேளாண்பொறியியல் துறையின் மூலம் இடுபொருட்கள் மற்றும் வேளாண் இயந்திரங்கள் என பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.4,17,13,489 மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் வழங்கினார்கள்.
கடந்த 3 நாட்களாக பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களில் 1,583 பயனாளிகளுக்கு ரூ.11.83 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் வழங்கினார்கள்.
இந்நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு, மகளிர் திட்ட இயக்குநர் அ.அமுதா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் துரைசாமி ஆட்மா தலைவர்கள் ஜெகதீசன், இராஜேந்திரன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் (பொ) சு.சொர்ணராஜ், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சுந்தரராமன், தாட்கோ மேலாளர் கவியரசு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரெ.சுரேஷ், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் முத்தமிழ்செல்வி மதியழகன், முன்னாள் வேப்பூர் ஒன்றியக் குழுத்தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் மரு.கருணாநிதி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.







