தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருக்ககூடாது. என்று கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய நீட் உள்ளிட்ட 13 மசோதாக்களை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி முடக்கிவைத்திருப்பதைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில், ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் சென்னை சின்னமலையில் நடைபெற்றது. கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் அவர் பேசியதாவது:
காங்கிரஸ், ஆளுநர் பதவிக்கு எதிரான கட்சி இல்லை. ஆளுநரின் பொறுப்புகளில் இருந்து எல்லையைத் தாண்டும்போது அதைஎதிர்க்க நேரிடுகிறது. மக்களாட்சியும், ஜனநாயகமும் செழிக்கும் தமிழகத்தில் உளவு பின்புலம் கொண்ட ஆளுநரை நியமிக்கும்போதே, அது ஏற்புடையதாக இல்லை என எச்சரித்திருந்தோம். இப்போது மாநில மக்களின் உணர்வை மதிக்காமல், சட்டப்பேரவையில் நீட்டுக்கு எதிராக இயற்றப்பட்ட தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருகிறார்.
பிரதமர் மோடியின் ராஜ தந்திரம் தமிழகத்தில் மக்களவைத் தேர்தலிலும், சட்டப்பேரவைத் தேர்தலிலும் தோல்வியடைந்தது. அதற்கு காரணமான, நல்லாட்சி நடத்தும் முதல்வர் ஸ்டாலினை அரசியல்ரீதியாக எதிர்க்காமல் சித்தாந்தரீதியாக பிரதமர் மோடி எதிர்க்கிறார். இந்த ஆட்சியை சிதைக்க நினைக்கிறார். அதை ஆளுநர் மூலமாகச் செய்ய நினைக்கிறார்.
ஆளுநர் மாநில அரசுகளுடன் இணக்கமாகச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் மாநில வளர்ச்சி தடைபடும். எனவே ஆளுநர் நீட் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் தமிழக மக்களுடன் ஒன்றிணைந்து ஆளுநருக்கு எதிரான போராட்டத்தை காங்கிரஸ் தீவிரப்படுத்தும்.இவ்வாறு அவர் பேசினார்.