கோவையில் அரசு பள்ளி மாணவிகள் விண்வெளியில் உள்ள குறுங்கோள்களை கண்டுபிடித்ததை நாசா அமைப்பு அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியிருக்கிறது.
கோவை, திருச்சி மற்றும் தமிழ்நாடு வானியல் அமைப்பு தமிழ்நாடு அறிவியல் துறை போன்றவை சார்பில் குறுங்கோள்கள் கண்டறியும் முகாம் நடைபெற்றது. இதில் கோவை ஒத்தகால்மண்டபம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் பிரமீஷா, ஸ்வேதா போன்றோர் கடந்த ஜனவரி 28ஆம் தேதி முதல் பிப்ரவரி 22ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் கலந்து கொண்டுள்ளனர். அதில் அவர்கள் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அங்கீகரித்து வழங்கிய கணினிச் செயலி, மூலம் இரண்டு குறுங்கோள்களை கண்டறிந்து சாதனை படைத்துள்ளனர்.
இதை நாசா அமைப்பு அங்கீகரித்து விஞ்ஞான் பிரசார் மூலம் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குறுங்கோள் கண்டுபிடித்ததற்கான சான்றிதழை கலெக்டர் சமீரனிடம் காண்பித்து மாணவிகள் பிரமீஷா, ஸ்வேதா ஆகியோர் வாழ்த்து பெற்றனர். மேலும் அந்த மாணவிகள் எதிர்காலத்தில் வானியல் சம்பந்தமான படிப்பு படிக்க உள்ளதாக கூறியுள்ளனர். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அந்த பள்ளியில் தொலைநோக்கி வசதி ஏற்பாடு செய்யப்படுவதாக கலெக்டர் சமீரன் உறுதி அளித்துள்ளார்.