• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

பல்கலைகழகங்கள் கைவிட்ட கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு தமிழக அரசே ஊதியம் வழங்க வேண்டும் – அன்புமணி

பல்கலைக்கழககளால் கைவிடப்பட்ட கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு தமிழக அரசே ஊதியத்தை வழங்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து, அரசுக் கல்லூரிகளாக மாற்றப்பட்ட 10 கலை அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. அதைக் கண்டித்தும், உடனடியாக ஊதியம் உள்ளிட்ட உரிமைகளை வழங்க வலியுறுத்தியும் திருவரங்கம் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படாதது வருத்தம் அளிக்கிறது.


திருவரங்கம் அரசு கலை அறிவியல் கல்லூரி 2006ஆம் ஆண்டில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் உறுப்புக் கல்லூரியாகத் தொடங்கப்பட்டது. அந்தக் கல்லூரியில் 40 கவுரவ விரிவுரையாளர்கள், 6 ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என மொத்தம் 46 பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தங்களுக்கு கடந்த 4 மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தையும், இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வையும் நிலுவைத் தொகையுடன் உடனே வழங்க வேண்டும் என்றும் கோரி கடந்த 6ஆம் தேதி முதல் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். நான்காம் நாளாகப் போராட்டம் தொடர்கிறது. போராடும் விரிவுரையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசோ, பல்கலைக்கழகமோ முன்வரவில்லை. மாறாக, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்பன போன்ற மிரட்டல்கள் தொடர்ந்து விடுக்கப்படுகின்றன.


உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வரும் கவுரவ விரிவுரையாளர்களின் கோரிக்கைகள் நியாயமானவை. அவர்களுக்கு ரூ.12,000 முதல் ரூ.15,000 வரை மட்டுமே மாத ஊதியமாக வழங்கப்படுகிறது. அதுவும் கடந்த 4 மாதங்களாக வழங்கப்படவில்லை எனும் சூழலில் அவர்களுக்குப் போராடுவதைத் தவிர்த்து வேறு என்ன வாய்ப்பு உள்ளது? அவர்கள் அனைவரும் கடந்த 15 ஆண்டுகளாக அதே கல்லூரியில் அதே சூழலில் பணியாற்றி தங்களின் எதிர்காலத்தைத் தொலைத்தவர்கள். அவர்களால் இனி வேறு வேலைக்குச் செல்ல இயலாது எனும் சூழலில் அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டிய அரசும், பாரதிதாசன் பல்கலைக்கழகமும் அவர்களைப் போராட விட்டு வேடிக்கை பார்ப்பது நியாயமல்ல.

திருவரங்கம் கல்லூரியில் பணியாற்றும் 46 பேருக்கு மட்டும்தான் இத்தகைய நிலை என்றில்லை. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 10 கல்லூரிகளில் பணியாற்றும் 692 கவுரவ விரிவுரையாளர்கள், தமிழ்நாடு முழுவதும் 41 கல்லூரிகளில் பணியாற்றும் 1500-க்கும் கூடுதலான கவுரவ விரிவுரையாளர்கள், நூற்றுக்கணக்கான ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் இதே நிலைதான். பேராசிரியர்கள் என்ற பணிப் பெருமையைச் சுமந்து கொண்டு வறுமையுடன் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் 108 கல்லூரிகளில் கற்பிக்கும் 4084 கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வும், நடப்பாண்டிற்கான ஊதியமும் உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில். முன்னாள் உறுப்புக் கல்லூரி விரிவுரையாளர்களின் துயரம் மட்டும் தொடர்கிறது.


கவுரவ விரிவுரையாளர்களின் இந்தத் துயரத்திற்குக் காரணம் அவர்களின் ஊதியத்தை ஏற்றுக்கொள்வதில் அரசுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் இடையில் நடக்கும் போட்டிதான். ஊரக மாணவர்களுக்கு உயர்கல்வி வழங்குவதற்காக கடந்த 15 ஆண்டுகளில் பல்கலைக்கழகங்களால் தொடங்கப்பட்ட 41 உறுப்புக் கல்லூரிகள் 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு படிப்படியாக அரசுக் கல்லூரிகளாக மாற்றப்பட்டன. அதன்பின் அந்தக் கல்லூரிகளின் கவுரவ விரிவுரையாளர்களுக்கு அரசுதான் ஊதியம் தர வேண்டும்.

ஆனால், அவர்களுக்குப் பல்கலைக்கழகங்களே தொடர்ந்து ஊதியம் அளிக்க வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு ஆணையிட்டதுதான் இப்போது எழுந்துள்ள சிக்கல்களுக்குக் காரணம்.பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசுக் கல்லூரிகளாக மாற்றப்பட்டவற்றில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு ஊதியமாக மட்டும் ஆண்டுக்கு ரூ.72 கோடி செலவாகும். இதில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு மட்டும் ரூ.18 கோடி செலவாகும். ஆனால், எந்தப் பல்கலைக்கழகத்திலும் அவ்வளவு நிதி இல்லாததால் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை.

அவர்கள் போராட்டம் நடத்தினால் ஒரு சில மாதங்களுக்கு மட்டும் ஊதியம் வழங்கப்படுவதும், பின்னர் பாக்கி வைக்கப்படுவதும் வாடிக்கையாகி விட்டது. கடந்த ஜூன் மாதம் கவுரவ விரிவுரையாளர்கள் ஊதியம் வழங்கப்படாத நிலையில், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்கள் மட்டும் ஊதியம் வழங்கப்பட்டது. அதன்பிறகு கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் அதன் நிரந்தரப் பணியாளர்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கவே நிதியில்லாமல் திணறுகின்றன. பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிகளுக்கு நிதி இல்லை.

இத்தகைய சூழலில் அரசு கல்லூரிகளாக்கப்பட்ட உறுப்புக் கல்லூரிகளின் கவுரவ விரிவுரையாளர்களுக்கும் ஊதியம் வழங்க கட்டாயப்படுத்தப்பட்டால் பல்கலைக்கழகங்கள் முடங்கி விடும். அதேநேரத்தில் இந்த ஊதியச் சுமையை அரசால் தாங்கிக் கொள்ள முடியும். இதை உணர்ந்து அரசுக் கல்லூரிகளாக மாற்றப்பட்ட 41 உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களின் ஊதிய செலவை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும். உள்ளிருப்புப் போராட்டம் நடத்தும் திருவரங்கம் கல்லூரி உள்ளிட்ட 41 அரசு கல்லூரி பணியாளர்களின் ஊதியம் மற்றும் ஊதிய உயர்வு நிலுவையை உடனே வழங்க வேண்டும்” என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.