• Tue. Apr 16th, 2024

மரபணு மாற்றத்துக்கு எதிராக நடிகர் கார்த்திக்

உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், மரபணு மாற்றப்பட்ட மற்றும் மரபணுவிலிருந்து உருவாக்கப்படும் உணவுகள் மீதான ஒழுங்குமுறைகளை மாற்றவுள்ளது. இதுகுறித்த இணைய வழிக் கையெழுத்து இயக்கம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.change.org என்கிற இணையம் மூலம் இக்கையெழுத்து இயக்கம் நடக்கிறது.

இந்தக் கையெழுத்து இயக்கத்தில் நடிகர் கார்த்தியும் கையெழுத்திட்டுள்ளார். மேலும், இதற்கு அனைவரது ஆதரவும் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து நடிகர் கார்த்தி பகிர்ந்துள்ள செய்தி…..

உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், மரபணு மாற்றப்பட்ட மற்றும் மரபணுவிலிருந்து உருவாக்கப்படும் உணவுகள் மீதான ஒழுங்குமுறைகளை மாற்றவுள்ளது. இதனால் அத்தகைய உணவுகள் நம் வாழ்க்கைக்குள் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இப்படி மரபணு மாற்றப்பட்ட உணவுகள் ஒவ்வாமை, நோய் எதிர்ப்புக் குறைபாடு, வளர்ச்சிக் குறைபாடு, வளர்ச்சி தடைப்படுதல், உடலுறுப்பு சேதம், இனப்பெருக்க பாதிப்புகள் மற்றும் புற்றுநோய் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள பெரும்பான்மையான நாடுகள் மரபணு மாற்றப்பட்ட பயிர் சாகுபடியை ஏற்பதில்லை. மேலும் பன்னாட்டு நிறுவனங்களின் அழுத்தம் இருந்தபோதிலும் இப்படியான உணவுப் பயிர்கள் சுற்றுச்சூழலுக்கும், ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பானவை அல்ல என்பதால் இந்தியாவிலும் அவற்றைப் பயிரிட இதுவரை அனுமதிக்கப்படவில்லை.

பொதுமக்கள் மற்றும் விஞ்ஞானிகளால் முன்வைக்கப்பட்ட வலுவான ஆதாரங்களின் காரணமாக Bt பிரிஞ்சால், GM கடுகு போன்றவை இதுவரை அனுமதிக்கப்படவில்லை. ஆனால், தற்போது விதிமுறைகளைத் தளர்த்துவதன் மூலம் மரபணு மாற்றப்பட்ட உணவுகளை நம் நாட்டுக்குள் அனுமதிப்பது ஏன் என்று புரியவில்லை.

இப்படியான உணவுகள் பாதுகாப்பானதா, இல்லையா என்பதை அறிய எந்த மாதிரியான சோதனைகள் பின்பற்றப்படும் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. யார், எப்படி இதுகுறித்து முடிவெடுப்பார்கள் என்பது குறித்தும் எந்தக் குறிப்பும் இல்லை. எனவே மக்கள் நலனைக் காக்க, இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாதவர்களுக்காக, நாம் ஒன்றிணைவோம். இந்த மனுவில் கையெழுத்திடுவோம்.

இவ்வாறு கார்த்தி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *