

அரசு பள்ளியில் பயின்று ஐஐடி நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவன் அருண்குமாரின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை அடுத்த கரடிப்பட்டியைச் சேர்ந்த 17 வயது மாணவன் அருண் குமார், தனது ஊரிலிருந்து 3 கி.மீ தூரம் தொலைவிலிருந்த சேவல்பட்டி அரசு பள்ளியில் 12ம் வகுப்பு பயின்றிருந்தார். அப்போது திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தை சேர்ந்த மாணவர்களின் உதவியுடன், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் 11, 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு வார இறுதி நாட்களில் தனியாக சிறப்பு பயிற்சிகள் நடத்த ஏற்பாடு செய்திருந்தார். இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்ற மாணவன் அருண்குமார், ஜெ.இ.இ. தேர்வில், 17,061-ம் இடமும்; ஜெ.இ.இ. அட்வான்ஸ்ல் தேர்வில் 12,175 இடமும் பெற்றார். ஓ.பி.சி.-என்.சி.எல். தரவரிசையில் 2,503 இடம் பெற்றிருக்கிறார். இதன் மூலம் இவருக்கு ஐஐடியில் கல்வி பயில வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சீட்டு கிடைத்தாலும் ஆனால் பொருளாதார ரீதியாக ஐஐடியில் சேர்ந்து படிக்க முடியாத நிலையில் மாணவன் அருண்குமார் தவித்து வந்தார்.
இதுகுறித்து ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து வெளியாகியுள்ள செய்திக்குறிப்பில், செவல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் அருண்குமார், இந்த ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT-ஹைதராபாத்) பொறியியல் படிப்பு படிப்பதற்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அவரது மேற்படிப்புக்கான கல்விச் செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என உறுதியளித்தார். மாணவர் அருண்குமாரை முதலமைச்சர் இன்று நேரில் வரவழைத்து பாராட்டி வாழ்த்தினார்.
