மகாராஷ்டிரா மாநிலம் அகமத்நகர் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் அகமத்நகர் மாவட்ட அரசு மருத்துவமனையில் நேற்று காலையில் ஐசியு வார்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் தீயில் கருகியும், மூச்சு திணறியும் 11 பேர் உயிரிழ்ந்துள்ளனர். இந்த வார்டில் 25 பேருக்கு மேல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடுமையான காயங்களுடன் மீட்கப்பட்டு வேறு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜேந்திர போசாலே கூறுகையில், “அரசு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை (ICU) பிரிவில் திடீரென தீ பற்றியது. உடனடியாக மருத்துவமனை ஊழியர்கள் அங்கு இருந்தவர்கள் உதவியுடன் சேர்ந்து தீயை அணைக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். ஆனால், தீ வேகமாக பரவியதன் காரணமாக முதற்கட்டமாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகளை அப்புறப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். ஆனால், அதற்குள் மூச்சுத் திணறல் மற்றும் தீ பாதிப்பு காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுவிட்டது” எனக் கூறியுள்ளார்.
காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் முதற்கட்டமாக மின்கசிவு காரணமாக ஏற்பட்ட விபத்து எனவும், இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் இதேபோல, மகாராஷ்டிரா மருத்துவமனையில் கொரோனா அவசர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.