பெண்களால் வழிநடத்தப்படும் இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் சுமார் ரூ.600 கோடி முதலீடு செய்யப்படும் என்று கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை இந்தியா வந்துள்ளார். டெல்லியில் நேற்று அவர் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து பேசினார். அத்துடன் இந்தியா 2022-க்கான கூகுள் என்ற நிகழ்விலும் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இந்திய டிஜிட்டல் மயமாக்கல் நிதியத்தின் (ஐ.டி.எப்.) ஒரு பகுதி, இந்தியாவில் ஸ்டார்ட்-அப்களில் அதிக கவனம் செலுத்துகிறது. இந்த நிதியில் இருந்து 75 மில்லியன் டாலர் (சுமார் ரூ.600 கோடி) பெண்களால் வழிநடத்தப்படும் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும். தொழில்நுட்பம் பெரிய அளவில் செயல்பட்டு உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்க்கையைத் தொடுகிறது. இது பொறுப்பான மற்றும் சமநிலையான ஒழுங்குமுறைகளை உருவாக்குவதற்கு அழைப்பு விடுக்கிறது. இந்தியா கொண்டிருக்கும் அளவு மற்றும் தொழில்நுட்பத் தலைமையைப் பொறுத்தவரை, நீங்கள் சமநிலையில் இருப்பதை உறுதி செய்வது முக்கியம்.
நீங்கள் ஒரு புதுமையான கட்டமைப்பை உருவாக்குகிறீர்கள். இதன் மூலம் நிறுவனங்கள் சட்ட கட்டமைப்பில் ஒரு நிச்சயத்திற்கு மேல் புதுமைகளை உருவாக்க முடியும். இது ஒரு முக்கியமான தருணம் என்று நினைக்கிறேன். இந்தியாவும் பெரிய ஏற்றுமதி பொருளாதாரமாக இருக்கும். இது திறந்த மற்றும் இணைக்கப்பட்ட இணையத்தில் இருந்து பயனடையும். அத்துடன் அந்த சமநிலையை சரியாக பெறுவதும் முக்கியம். இவ்வாறு சுந்தர் பிச்சை கூறினார். இதைத்தொடர்ந்து பிரதமர் மோடியை சுந்தர் பிச்சை சந்தித்து பேசினார். இதை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு மகிழ்ச்சி
தெரிவித்து இருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:- பிரதமர் மோடியுடனான இன்றைய சிறப்பான சந்திப்புக்கு நன்றி. உங்கள் தலைமையின் கீழ் தொழில்நுட்ப மாற்றத்தின் விரைவான வேகத்தை காண தூண்டுகிறது. அனைவருக்கும் வேலை செய்யும் திறந்த, இணைக்கப்பட்ட இணையத்தை முன்னேற்றுவதற்கு எங்களின் வலுவான ஆதரவை தொடர்வதையும், இந்தியாவின் ஜி20 தலைவர் பதவிக்கு ஆதரவளிப்பதையும் ஆவலுடன் எதிர்நோக்குகிறோம். பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா பார்வை, நாடு முழுவதும் நாம் காணும் முன்னேற்றத்தை விரைவுபடுத்த உதவியது. மேலும் ஜி20 தலைவராக இந்தியா தனது அனுபவத்தை உலகத்துடன் பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டு இருந்தார். முன்னதாக டெல்லி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவையும் சுந்தர் பிச்சை சந்தித்து பேசினார்.