


தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விடை பெற்று விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இந்த முறை வடகிழக்கு பருவமழை மக்களின் தேவையை பூர்த்தி செய்த நிலையில், இன்றுடன் விடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு (2024) அக்டோபர் 15ம் தேதி தொடங்கிய வடகிழக்குப் பருவமழை தமிழகம், புதுச்சேரி, கேரளா, கடலோர ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து இன்றுடன் (ஜன.,27) விலகியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், வடகிழக்கு பருவக்காற்று இரு நாட்களில் விலகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 15ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. ஜனவரி முதல் டிசம்பர் இறுதி வரையிலான காலகட்டத்தில், 117 செ.மீ., மழை பெய்தது. இது, 2023ம் ஆண்டைவிட, 15 சதவீதம் அதிகம்.
வடகிழக்கு பருவமழை காலத்தில், திருநெல்வேலி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், விழுப்புரம் மாவட்டங்களில், இயல்பைவிட மிக அதிகமாக, 59 சதவீதத்துக்கு மேல் மழை பதிவாகி இருந்தது. இந்த முறை தென் மாவட்டங்களில் அதிகமான மழை கொட்டி தீர்த்தது.
ஆண்டுதோறும் அக்டோபர் 3வது வாரம் முதல் டிசம்பர் மாதம் இறுதி வரை வடகிழக்குப் பருவமழை காலம் ஆகும். ஆனால் நடப்பாண்டில் ஜனவரி மாதம் வரை வடகிழக்கு பருவமழை நீடித்து வந்தது.
இந்நிலையில், வடகிழக்குப் பருவமழை தமிழகம், புதுச்சேரி கேரளா, கடலோர ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து இன்றுடன் விலகியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 100 நாட்கள் மேலாக மழை பெய்த நிலையில், இயல்பை விட 33சதவீதம் அதிகமாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

