• Tue. Mar 19th, 2024

கோகுல்ராஜ் கொலை வழக்கு..யுவராஜூக்கு சாகும் வரை ஆயுள்

ByA.Tamilselvan

Jun 2, 2023

ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி மாணவர் கோகுல்ராஜ் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் முதல் குற்றவாளியான யுவராஜ் சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
சேலம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ். தன்னுடன் படித்த சக தோழியான சுவாதியுடன் கடந்த 2015 ஜூன் 23ஆம் தேதி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு பேசிக் கொண்டிருந்தார்.இரவு ஆகியும் கோகுல்ராஜ் வீடு திரும்பாததால், அவருடைய பெற்றோர்கள் கோகுல்ராஜைத் தேடிக் கொண்டிருந்தார்கள்.
இதுதொடர்பாக, திருச்செங்கோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்த நிலையில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜின் ஆட்கள் கோகுல்ராஜை கடத்தியதாக கூறப்பட்டது. ஜூன் 24ஆம் தேதி பள்ளிப்பாளையம் அருகே தொட்டிபாளையம் ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கோகுல்ராஜ் உடல் மீட்கப்பட்டது.
கோவிலுக்கு வந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜும் அவருடைய ஆட்களும் கோகுல்ராஜை மிரட்டிக் கூட்டிச் சென்றார்கள். அதற்கான ஆதாரம், அந்தக் கோயிலில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி. கேமரா ஃபுட்டேஜில் பதிவாகியிருந்தது. அதுவே இந்த வழக்கில் முக்கிய சாட்சியமாக மாறியது.
வழக்கில் தொடர்புடைய தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது கூட்டாளிகள் 15 பேரும் நீண்ட நாட்கள் தலைமறைவாக இருந்தனர். அவ்வப்போது ஆடியோவும் வெளியிட்டார் யுவராஜ். இந்த கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த காவல்துறை கண்காணிப்பாளர் விஷ்ணுப்பிரியாவும் தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலைக்குக் காரணம் யுவராஜ்தான் என்று சந்தேகம் எழுந்தது. இதையடுத்து இந்த கோகுல்ராஜ் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாறியது.
திடீரென நாமக்கல் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் சரண் அடைய உள்ளதாக கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பியிருந்தார் யுவராஜ். 100 நாட்கள் தலைமறைவு வாழ்க்கைக்குப் பிறகு கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபார் 11ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நாமக்கல் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் யுவராஜ் சரணடைந்தார். இந்த வழக்கானது 2019ம் ஆண்டு மே 5ம் தேதி முதல் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அனைத்து வழக்கு விசாரணை நிறைவு பெற்றதையடுத்து கோகுல்ராஜ் கொலை வழக்கில் மார்ச் 8ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. முதல் குற்றவாளியான யுவராஜூக்கு மூன்று ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சம்பத்குமார் தீர்ப்பளித்தார். சாகும் வரை சிறையில் இருக்க உத்தரவிடப்பட்டது.
தண்டனையை ரத்து செய்யக் கோரி யுவராஜ் உட்பட 10 பேரும் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். விடுதலையான 5 பேருக்கு தண்டனை வழங்கக் கோரி கோகுல்ராஜ் தாயார் சித்ரா, சிபிசிஐடி தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் முக்கிய சாட்சியான சுவாதியிடம் விசாரித்தபோது வீடியோ காட்சிகளை ஒளிபரப்பிய நீதிபதிகள் சில கேள்விகளை எழுப்பினர். அதற்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். விசாரணை நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் சுவாதி மாறி மாறி சாட்சியம் அளித்ததாக கூறி, அவர் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தனர்.
கடந்த ஜனவரி மாதம் 22ஆம் தேதி கோகுல்ராஜ் மரணம் குறித்து சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வுசெய்ய உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் கோயிலுக்கு வருகை தந்தனர்.
அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் ஆய்வை முடித்தபிறகு, கோகுல்ராஜ் உடல் கிடந்த ரயில்வே டிராக் உள்ள கிழக்கு தொட்டிப்பாளையம் பகுதிக்குச் சென்று, அங்கும் ஆய்வை மேற்கொண்டனர்.அப்பீல் வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்றைய தினம் தீர்ப்பினை உயர் நீதிமன்ற நீதிபதி வாசித்தார். மதுரை நீதிமன்றம் யுவராஜ் உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு அளித்த தீர்ப்பினை உறுதி செய்து தீர்ப்பளித்தார். மதுரை வன் கொடுமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார். யுவராஜ் உள்ளிட்ட 10 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்ததோடு மேல்முறையீட்டு மனுக்களையும் நீதிபதி டிஸ்மிஸ் செய்தார். இந்த வழக்கில் சிசிடிவி காட்சி முக்கிய சாட்சியமாக விளங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *