• Wed. Sep 17th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு

Byவிஷா

May 28, 2025

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை மீதான வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி தீர்ப்பளித்துள்ளார். இந்த வழக்கில் ஞானசேகரன் மீது 11 பிரிவுகளின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டது. அத்தனை குற்றச்சாட்டுகளும் நிரூபணமானதாக அறிவித்த நீதிபதி ஞானசேகரன் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கியுள்ளார். இந்த வழங்கில் 5 மாதங்களில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தண்டனை விவரம் ஜூன் 2-ம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்துள்ளார்.
தண்டனை விவரம் குறித்து ஞானசேகரனிடம் நீதிபதி கேட்டபோது, தனக்கு வயதான தாய் இருப்பதாகவும், தனது தொழிலுக்கு நஷ்டம் ஏற்படும் என்பதாலும், குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டுமென குற்றவாளி ஞானசேகரன் நீதிபதியிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த டிச.23 அன்று 19 வயதான 2-ம் ஆண்டு பொறியியல் மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பான புகாரின்பேரில் கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீஸார் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து அதேபகுதியில் பிரியாணி கடை நடத்தி வந்த கோட்டூரைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரை டிச.24 அன்று கைது செய்தனர்.
இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து கடந்த டிச.28 அன்று உத்தரவிட்டது. இந்நிலையில் ஞானசேகரனை குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் கடந்த ஜன.5 அன்று உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் கடந்த பிப்.24 அன்று சைதாப்பேட்டை 9-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஞானசேகரனுக்கு எதிராக 100 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு இந்த வழக்கு விசாரணை கடந்த மார்ச் 7-ம் தேதியன்று சென்னை மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
தனக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானது என்றும், ஆதாரங்கள் இல்லாமல் தனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை போலீஸார் சுமத்தியுள்ளதால், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் எனக்கோரி ஞானசேகரன் தரப்பில் தாக்கல் செய்த மனுவை மகளிர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 8-ம் தேதியன்று தள்ளுபடி செய்தது. அன்றைய தினமே குற்றச்சாட்டுகளையும் பதிவு செய்தது.
அதில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடல், ஆதாரங்களை அழித்தல், கல்லூரி மாணவியை சட்டவிரோதமாக கட்டுப்பாட்டில் வைத்திருந்து மிரட்டி நிர்வாணப்படுத்துதல், புகைப்படம் எடுத்து வெளியிடல் போன்ற பாலியல் குற்றங்களுக்காக தகவல் தொழில்நுட்பச் சட்டம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் பிஎன்எஸ் சட்டத்தின் 12 பிரிவுகளின்கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
அதன்பிறகு இந்த வழக்கில் மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பாக கடந்த ஏப்.23 அன்று சாட்சி விசாரணை தொடங்கியது. தினந்தோறும் என்ற அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த விசாரணையில் காவல்துறை தரப்பில் 29 பேர் சாட்சியம் அளித்தனர். ஞானசேகரன் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் அரசு தரப்பில் 75 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கின், அனைத்து சாட்சி விசாரணை மற்றும் குறுக்கு விசாரணைகளும் நிறைவடைந்த பின்னர் கடந்த மே 20 முதல் மே 23 வரை இரு தரப்பிலும் 3 நாட்களில் தங்களது இறுதி வாதங்களை நிறைவு செய்தனர். காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.பி.மேரி ஜெயந்தி, குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரனுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கபட்டுள்ளதாகவும் அறிவியல் ரீதியான வலுவான ஆதாரங்கள் உள்ளதாகவும் கூறியதுடன் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் மே 28-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு இந்த வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதாலும், 5 மாதத்தில் இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்படவுள்ளது என்பதாலும் நீதிமன்ற வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது மகளிர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்து வரும் நீதிபதி எம்.ராஜலட்சுமி சென்னை பெருநகர முதலாவது கூடுதல் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தீர்ப்பளித்ததும் அவர் புதிய பொறுப்பை ஏற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு எதிராக மொத்தம் 35 குற்றவழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில், அதில் பல வழக்குகளில் தண்டனையும், சில வழக்குகளில் விடுதலையும் பெற்றுள்ள ஞானசேகரனுக்கு எதிராக தற்போது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.