



என்னை யாரும் சிக்க வைக்க முடியாது. நான் எம்ஜிஆர், ஜெயலலிதா பாதையில் செல்கிறவன் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், கோபி சட்டமன்ற தொகுதிகுட்பட்ட கரட்டடிப்பாளையத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 108வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசுகையில். “நமது கழகப் பொதுச் செயலாளர் கட்டளையின் அடிப்படையில், ஈரோடு கிழக்கு தேர்தல் காரணமாக, இந்தக் கூட்டம் தாமதமாக நடக்கிறது. நான் எத்தனை ஆண்டு காலம் அரசியலில் இருக்கிறேன். எத்தனை தலைவர்களை சந்தித்துள்ளேன் என்பது உங்களுக்குத் தெரியும். இங்கு எதாவது கிடைக்குமா என்று பார்த்தால், எதுவும் கிடைக்காது.

அதிமுக தொடங்கப்பட்டபோது நான் சாதாரண தொண்டன். அப்போது எனக்கு பொருளாளர் பதவியை எம்ஜிஆர் வழங்கி, பொதுக்குழுவை நடத்துமாறு கூறினார். நாங்கள் சிறப்பாக பொதுக்குழுவை வெற்றிகரமாக நடத்திக் காட்டினோம். அவர் உத்தரவின் பேரில் நாங்கள் பச்சை குத்திக் கொண்டோம். 14 முறை புரட்சி தலைவருடன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன். இந்தக் கூட்டத்தில் நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை. என்னை யாரும் சிக்க வைக்க முடியாது. நான் எம்ஜிஆர், ஜெயலலிதா பாதையில் செல்கிறவன். அந்த தெய்வங்கள் தான் நமக்கு வழிகாட்டிகள். அவர்கள் இருவரும் இல்லை என்றால் நான் இந்த இடத்தில் நின்று பேசியிருக்க இயலாது.
அத்திக்கடவு – அவிநாசி திட்ட விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா படம் இல்லை என்பதால் நான் கலந்து கொள்ளவில்லை. இதன்பிறகு எத்தனையோ சொல்கிறார்கள். என் வீட்டுக்கு நான் கேட்காமலே போலீஸ் பாதுகாப்பு போட்டார்கள். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. என்னைப் பொறுத்தவரை நேர்மையான பாதையில், தன்னலம் கருதாது பாடுபடக் கூடியவன். ஏற்கெனவே எனக்கு வாய்ப்பு வந்தபோது, அதுகுறித்து நான் கவலைப்படவில்லை. இந்த இயக்கம் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தவன் நான். இதை மறந்து என்னை சோதிக்காதீர்கள். இதை வேண்டுகோளாக வைக்கிறேன்.
நான் தெளிவாக, தெளிந்த சிந்தனையோடு இருக்கிறேன். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையோடு இருக்கிறேன். இந்த இயக்கம் தொண்டர்கள் நிறைந்த, ஒற்றுமையோடு பணியாற்றுகின்ற, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை கொண்டதாகும். இதை மறந்து விடக்கூடாது.
ஜெயலலிதா விரலைக் காட்டினால் அதற்கான காரணத்தை உணர்ந்து செயல்படுபவன் நான். எதைக் கொடுத்தாலும் வெற்றிகரமாக முடிக்கக் கூடியவர், விசுவாசமானவர் செங்கோட்டையன் என்று ஜெயலலிதா என்னை பாராட்டியுள்ளார். தொண்டனோடு தொண்டனாக இருந்து பணியாற்றக் கூடியவன். என்றைக்கும் தலைவராக நினைக்கவில்லை. திமுக ஆட்சியில் பல்வேறு சோதனைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். எனவே தொண்டர்களோடு தொண்டராக இருந்து நான் பணியாற்றி மீண்டும் தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை உருவாக்குவோம்” என்று அவர் பேசினார். இக்கூட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட தொண்டர்கள், நிர்வாகிகள் பெயரை சுமார் 10 நிமிடம் படித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயரை ஒரு முறை கூட பயன்படுத்தாமல் உரையை நிறைவு செய்தார்.

