• Tue. Feb 18th, 2025

ஆடிட்டர் குருமூர்த்தி வாயை அடக்க வேண்டும்… எச்சரித்த ஜெயக்குமார்!

ByP.Kavitha Kumar

Jan 17, 2025

சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக உறுதியான முடிவெடுத்த பிறகும் ஆடிட்டர் குருமூர்த்தி தேவையில்லாமல் பேசினால் வாங்கிக் கட்டிக் கொள்வார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாள் விழா இன்று நடைபெற்றது. கட்சி அலுவலக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் 108 கிலோ எடை கொண்ட கேக்கை வெட்டினார்.

இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “பாஜகவினர் எம்ஜிஆரை இன்று புகழ்ந்துள்ளனர். எல்லா தரப்பட்ட மக்களும் போற்றக்கூடிய தலைவராக எம்.ஜி.ஆர். இருந்தார். ஈரோடு இடைத்தேர்தலை புறக்கணிப்பது அதிமுகவின் முடிவு. ஆடிட்டர் குருமூர்த்தி என்னிடம் ஏற்கனவே பல தடவை வாங்கிக் கட்டிக் கொண்டு இருக்கிறார். குருமூர்த்தி வாயை அடக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பது எங்கள் கட்சியால் எடுக்கப்பட்ட முடிவு. சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதும் அதிமுக முடிவெடுத்து தான். குருமூர்த்தி இத்துடன் வாயை மூடி கொண்டிருக்க வேண்டும், இல்லையென்றால் வாங்கி கட்டிக்கொள்வார்” என்று தெரிவித்தார்.