மக்களவைத் தேர்தலில் 85வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தபடியே வாக்களிக்கும் வகையில், இன்று முதல் படிவம் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு 176 கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. எனவே மொத்த வாக்குச்சாவடிகள் 68,320-ஆக உயர்ந்துள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உணவுப் பொருட்கள் விலை வித்தியாசப்படுவதால் தேர்தல் செலவினத்துக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ள விலை பட்டியலை மீண்டும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை, 1,91,491 அரசு அலுவலகங்களின் முன் வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளது. 52,938 தனியார் கட்டிடங்கள் முன் வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களும் அகற்றப்பட்டுள்ளது.
இன்று 20-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வீடு வீடாக சென்று படிவம் 12 டி வழங்கப்படும். அதில் அவர்கள் விரும்பும் பட்சத்தில் தபால் வாக்களிக்கலாம்.
சிவிஜில் செயலி மூலம் மொத்தம் இதுவரை 282 புகார்கள் பெறப்பட்டுள்ளது. ம.தி.மு.க., நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது குறித்து இந்திய தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்கும்.
பாராளுமன்றத் தேர்தலுக்காக தொகுதி வாரியாக நாளை(இன்று) முதல் வாக்கு எந்திரங்கள் பிரிக்கப்படும். இந்த தேர்தலில் அதிகளவில் ஆசிரியர்களே பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். சுமார் 4 லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.