

தீபாவளி திருநாளில் ‘காற்று மாசை போக்க வெடியை மறந்து செடியை நடுங்கள்’ சேலத்தில் நூதன முறையில் விழிப்புணர்வை சிறுவர்கள் ஏற்படுத்தினர். இதற்கு பொதுமக்களிடம் பாராட்டு குவிகிறது.
தீபாவளி என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது பட்டாசு. இருள் நீங்கி அனைவரது வாழ்விலும் ஒளி பிறக்க வேண்டும் என்ற ஐதீகத்தின் அடிப்படையில் வீடுகளில் தீபம் ஏற்றி வீட்டின் முன்பு பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடுவது தீபாவளி பண்டிகையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
வீடுகளில் தீபம் ஏற்றுவது வழிபாட்டில் ஒன்றாக இருந்தாலும், வீட்டின் முன்பு பட்டாசு வெடிப்பது காற்று மாசை நாமே ஏற்படுத்துவதற்கு காரணமாக அமைந்துவிடுகிறது. நாளுக்கு நாள் இதுபோன்ற காற்று மாசு காரணமாக சுற்றுச்சூழல் மாசடைந்து சுனாமி பூகம்பம் போன்ற பல்வேறு இயற்கை இடர்பாடுகளால் மக்கள் பாதிக்கக் வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற இயற்கை இடர்பாடுகளை தவிர்க்க ஒவ்வொருவரும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமே என்றாகி வருகிறது. அந்த வகையில் தீபாவளியின் போது அதிக அளவில் பட்டாசு வெடிப்பதால் காற்று அதிகளவில் மாசடைகிறது இதை தடுக்க தற்போது பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையின் போது காற்று மாசு ஏற்படுவதை தடுக்க செடியை நடுங்கள் என்ற தலைப்பின் கீழ் சிறுவர்கள் ஒன்றிணைந்து பட்டாசு வெடிக்கும் இடத்திற்கு சென்று, அவர்களை நேரில் சந்தித்து வெடிமருந்துகளை மறந்து செடியை நடுங்கள் எனக்கூறி மரக்கன்றுகளை இலவசமாக வழங்கி வருகின்றனர்.
குறிப்பாக பட்டாசு வெடிக்க ஆர்வம் காட்டும் சிறுவர்களே இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஈடுபட்டு இருப்பது பொதுமக்கள் வரவேற்கும் விதமாக உள்ளது. இதனை ஆச்சர்யத்துடன் பார்க்கும் பொதுமக்கள் சிறுவர்களை ஊக்கப்படுத்தி அவர்கள் கொடுக்கும் மரக்கன்றுகளை பெற்று பட்டாசு வெடிப்பதை இனி நிறுத்த போவதாகவும் அவர்கள் உறுதியளித்தனர். இதேபோல் சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் இந்த சிறுவர்கள் நேரடியாக ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று அவர்களை நேரில் சந்தித்து மரக்கன்றுகளை வழங்கி காற்று மாசுபடுவதை தடுக்க தேவையான நடவடிக்கை எடுங்கள் என்றும், பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் மரம் நடுதல் ஏற்படும் நன்மைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். அவர்களுக்கு நிழல் தரும் மரக்கன்றுகளை வழங்கி வருகின்றனர். சிறுவர்களின் இந்த வினோத விழிப்புணர்வு நிகழ்ச்சி தீபாவளி திருநாளில் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது .
நிலம் 5 பவுண்டேஷன் என்ற அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் சிறுவர்கள் திரளாக பங்கேற்றனர்.
