• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அதிக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளுக்கு..,
உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Byவிஷா

Feb 15, 2023

அதிக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளுக்கு உயர்நீதிமன்றம் அதிரடியான உத்தரவைப் பிறப்பித்திருப்பது, சினிமா பிரியர்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
காலங்கள் மாறினாலும் மக்களுக்கு சினிமாவின் மீதான மோகம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆனால் அதனை ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுகின்றனர். எத்தனை ஆயிரம் செலவழித்தாவது முதல் நாள் முதல் ஷோ பார்க்க வேண்டும் என ரசிகர்கள் வெறித்தனமாக இருப்பதால் தான் திரையரங்குகளும் முதல் நாளில் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்வதை தொடர்ந்து வருகின்றனர்.
சமீபத்தில் வெளிவந்த வாரிசு மற்றும் துணிவு படங்களுக்கு அதிகாலை காட்சிக்கு ஒரு டிக்கெட் ரூ.3000 வரை விற்கப்பட்டன. இப்படி பெரிய படங்கள் ரிலீசாகும் சமயத்தில் இது தொடர்பாக புகார்கள் வந்தாலும், அதுகுறித்து பெரியளவில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. இதனிடையே கடந்த 2017-ம் ஆண்டு சூர்யாவின் சிங்கம் 3 மற்றும் விஜய்யின் பைரவா ஆகிய படங்கள் பொங்கலுக்கு ரிலீசான போது அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக கூறி தேவராஜன் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
நீதிபதி அனிதா சுமந்த் தலைமையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அதிக கட்டணம் வசூலித்த திரையரங்குகளிடம் அபராதம் வசூலிக்கப்பட்டதாக தெரிவித்தார். இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளை தொடர்ந்து கண்காணிக்க உத்தரவிட்டார்.
அத்துடன் அதிக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளிடம் அபராதம் வசூலிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்தார். இந்த உத்தரவுக்கு பின்னர் திரையரங்குகள் அதிக கட்டணம் வசூலிப்பதை கைவிடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். நீதிமன்றத்தில் இந்த உத்தரவுக்கு சினிமா பிரியர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது.