

தேனி மாவட்டத்தில் உள்ள ஏழைகளின் பிருந்தாவனம் என்று அழைக்ககூடிய வைகை அணை ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக தனது முழு கொள்ளளவை எட்டுகிறது.
71 அடி உயரமுள்ள அணையின் நீர்மட்டம் கடந்த 4 ஆம் தேதி 70 அடி எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் அப்போது வெளியேற்றப்பட்டது. பின்னர் சிவகங்கை ,இராமநாதபுரம் கடைமடை பாசனத்திற்காக ஆற்றின் வழியாக வினாடிக்கு 3000 கன அடியும் ,மதுரை ,திண்டுக்கல் பாசனத்திற்காக கால்வாய் வழியாக வினாடிக்கு 900 கன அடி நீரும் திறந்து விடப்பட்டது. ஆண்டிபட்டி சேடப்பட்டி கூட்டு குடிநீர் திட்டம், தேனி அல்லிநகரம் கூட்டு குடிநீர் திட்டம், மதுரை கூட்டுக் குடிநீர் திட்டம் ஆகிய திட்டங்களுக்கு அணையில் இருந்து வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம்போல் வெளியேற்றபட்டு வருகிறது.இதனால் நீர்மட்டம் குறைய தொடங்கியது.

இதனை அடுத்து கடந்த இரண்டு நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்து வருவதாலும் , பெரியாற்றிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து இன்றைய காலை நிலவரப்படி 69.55 அடியாக உயர்ந்து உள்ளது. இன்று மாலை மீண்டும் இம்மாதத்தில் இரண்டாவது முறையாக 70 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 10 மைல் சுற்றளவு உள்ள வைகை அணை நீர் தேக்கம் காண்போர் கண்களை வியக்கும் வகையில கடல் போல் காட்சியளிக்கிறது .தொடர்ந்து இந்த வருடம் அணையின் நீர்மட்டம் 60 அடிக்கு குறையாமல் தேக்கி வைக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பொதுப்பணித்துறையினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
