• Fri. Jan 24th, 2025

இந்தியா வல்லரசாக மாற, உயர் கல்வி அவசியம்

BySeenu

Jan 12, 2025

இந்தியா வல்லரசாக மாறுவதற்கு நமது நாட்டில் உயர் கல்வி சேர்க்கை விகிதத்தை அதிகரிப்பது அவசியம் என சென்னை ஐ.ஐ.டி.இயக்குனர் காமகோடி கோவையில் நடைபெற்ற இளைஞர்கள் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

கோவையில் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி,தஞ்சாவூர் இராமகிருஷ்ணா மடம் மற்றும் சுவாமி விவேகானந்தா கல்வி நிலையம் ஆகியோர் இணைந்து இளைஞர்களுக்கான மாநாடு கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது.

தேசிய இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குனர் வாசுகி தலைமை தாங்கினார். இதில் சுவாமி நரசிம்மானந்தா ஜி, விமுர்த்தானந்தா ஜி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

மாநாட்டில் சவால்களை எதிர் கொள்வதில் சுவாமி விவேகானந்தரின் தன்னம்பிக்கை,இளைஞர்கள் சமுதாய மாற்றத்தின் முக்கிய தூண்கள் என இளைஞர்களின் முன்னேற்றங்களுக்கான தேவையான கருத்துக்கள் தொடர்பாக முக்கிய விருந்தினர்கள் உரையாற்றினர்.

தொடர்ந்து நடைபெற்ற மாநாட்டில் சிறப்பு விருந்தினராக மெட்ராஸ் ஐ.ஐ.டி.யின் இயக்குனர் பேராசிரியர் முனைவர் காமகோடி இளைஞர்களிடையே உரையாடினார்.

அப்போது பேசிய அவர், இன்றைய இளம் மாணவர்களின் ஒவ்வொரு கண்டு பிடிப்புகளும் செயல்களும் எதிர்காலத்தை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.

தொடர்ந்து பேசிய உயர் கல்வி சேர்க்கை விகிதம் புள்ளி விவரங்கள் அடிப்படையில் தமிழகம் 50 சதவீதமாக இருப்பதாக கூறிய அவர்,நமது நாடு 27 சதவீதம் மட்டுமே இருப்பதாக தெரிவித்தார்.

இந்த நிலை நீடித்தால் எதிர்காலத்தில் நாட்டில் உயர்கல்வி படித்தவர்களே இல்லாத நிலை ஏற்பட்டு விடும் என கவலை தெரிவித்த அவர், இளம் மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்களது ஊர்களில் உள்ள பள்ளி பருவத்தை முடித்த மாணவர்களை உயர் கல்வி பயில அறிவுறுத்தி கல்லூரிகளில் சேர்த்தி விடுவதை ஒரு கடமையாக கருதி செய்ய உறுதி ஏற்க வேண்டும் என கூறினார்.

இந்தியா வல்லரசாக மாறுவதற்கு ,நாட்டில் உயர்கல்வி படித்தவர்களின் சதவீதம் உயர்த்துவதே முதல் படி என அவர் கூறினார்.

மேலும் இந்திய நாட்டின் அனைத்து விதமான தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உள்நாட்டு உற்பத்தி அவசியம் என குறிப்பிட்ட அவர், வெளிநாட்டினரின் தேவை இல்லாமல் நமக்கு நாமே என்ற நிலை அவசியம் என தெரிவித்தார்.

நவீன தொழில் நுட்பங்களை நாமே உருவாக்கி தொழில் முனைவோர்களாக மாறுவதற்கு இனி இளைஞர்கள் தயாராக வேண்டும் என அவர் வேண்டு கோள் விடுத்தார்.