• Sun. Oct 25th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

கோவை அரசு மருத்துவமனையில் கரைபுரண்ட வெள்ளம்…

BySeenu

Oct 25, 2026

கோவையில் கடந்த சில நாட்களாக இடை விடாது பெய்து வரும் கனமழையின் காரணமாக, கோவை அரசு தலைமை மருத்துவமனை (GH) வளாகத்தில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி தரைத்தள வார்டுகளைச் சூழ்ந்து உள்ளது. இதனால் அங்கு சிகிச்சையில் உள்ள நோயாளிகள், குழந்தைகள் மற்றும் அவர்களது உறவினர்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொழிந்து வரும் வடகிழக்கு பருவமழையால், கோவை அரசு மருத்துவமனை வளாகத்தின் பல பகுதிகள் நீர் நிலைகள் போலக் காட்சி அளிக்கின்றன. தரைத்தளத்தில் அமைந்து உள்ள அவசர சிகிச்சைப் பிரிவு பாதை, வெளிநோயாளி வார்டுகள் மற்றும் இரத்தப் பரிசோதனைக்கூடப் பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்து உள்ளது.
​இதனால், கட்டில்களில் அனுமதிக்கப்பட்டு உள்ள நோயாளிகள் தங்களது தேவைகளுக்காகக் கீழே இறங்கக்கூட முடியாமல் தவித்து வருகின்றனர்.

சிகிச்சை பெற வந்த நோயாளிகளும், அவர்களுக்கு உதவியாக வந்த உறவினர்களும் முழங்காலளவு நீரில் நடந்து செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.

மருத்துவமனை வளாகத்திற்குள் தேங்கி உள்ள மழைநீருடன் கழிவுநீரும் கலங்கி உள்ளதால், தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக நோயாளிகளின் உறவினர்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.

​மேலும், சக்கர நாற்காலிகள் (Wheelchair) மற்றும் ஸ்ட்ரெச்சர்களை நீருக்குள் தள்ளிச் செல்ல ஊழியர்கள் கடும் போராட்டத்தை எதிர்நோக்கி உள்ளனர்.

​அரசு மருத்துவமனைக்குத் தினசரி ஆயிரக்கணக்கான ஏழை – எளிய மக்கள் வந்து செல்லும் நிலையில், மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் உடனடியாகத் தலையிட்டு மருத்துவமனை வளாகத்தில் தேங்கி உள்ள நீரை முற்றிலுமாக அகற்றிச் சீரமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.