• Sat. Apr 20th, 2024

கடலூரில் 10 ஆயிரம் வீடுகளை சூழ்ந்த வெள்ளம்

Byமதி

Nov 20, 2021

தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடக, ஆந்திர மாநிலங்களிலும் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைகள், ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் என அனைத்தும் நிரம்பி வழிகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

தற்போது கனமழை பெய்ததால் தென்பெண்ணை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இது தவிர கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழையாலும், காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் மூலம் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. சாத்தனூர் அணையில் இருந்து 50 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

முதல்கட்டமாக தென்பெண்ணை ஆற்றில் 75 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. பின்பு அது படிப்படியாக நேற்று காலை 1.25 லட்சம் கனஅடியாக அதிகரித்தது. இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றின் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது. ஆற்றின் கீழ்மட்டத்தில் இருந்து 25 அடி உயரத்துக்கு தண்ணீர் செல்கிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து 75 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

இந்த திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூர் புதிய கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சுங்கச்சாவடி சாலை, மேல்பட்டாம்பாக்கம் சாலை, அழகியநத்தம் சாலை தண்ணீரில் மூழ்கியது.

இன்று காலையும் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்தது. இதையடுத்து கடலூர் மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதியில் உள்ள குண்டுசாலை, பெரியகங்கணாங்குப்பம், செம்மண்டலம், குண்டு உப்பலவாடி, கண்டக்காடு, தாழங்குடா, நாணல்மேடு, சுனாமி நகர், எஸ்.என்.சாவடி உள்ளிட்ட 50 இடங்களில் ஆற்று வெள்ள நீர் புகுந்தது.

இந்த தண்ணீர் சுமார் 10 ஆயிரம் வீடுகளை சூழ்ந்துள்ளது. இதனால் அந்த பகுதி தீவுபோல காணப்பட்டது. அங்குள்ள வீடுகளில் முதல் தளம் வரை தண்ணீர் தேங்கி உள்ளது. இதுமட்டுமின்றி அழகியநத்தம் முதல் தாழங்குடா வரையில் உள்ள 4 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *