சுருளி அருவியில் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் அருவியில் குளிக்க கம்பம் கிழக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி, தேனி மாவட்டத்தின் சுற்றுலா தலமாகவும், புண்ணிய தலமாகவும் விளங்குகிறது. இங்குள்ள கைலாசநாதர் குகை, பூதநாரயணன் கோயில், ஆதி அண்ணாமலையார் கோவில், வேலப்பர் கோயில், சுருளிமலை ஸ்ரீ ஐயப்பன் கோவில், கன்னிமார் கோயில் புகழ் பெற்றவை. இதனால் ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் சுருளி அருவிக்கு நாள்தோறும் வந்து செல்கின்றனர். ஹைவேவிஸ் தூவானம் அணை தண்ணீரும், ஈத்தக்காடு, அரிசிப்பாறை பகுதி ஊற்றுத் தண்ணீரும் சுருளி அருவிக்கு வருகிறது.
இந்நிலையில் நேற்று முதல் இப்பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக அருவியில் நேற்று இரவு முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இன்று காலை வரை வெள்ளப்பெருக்கு குறையாததால், பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி இன்று அருவியில் குளிப்பதற்கு கிழக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், மழையின் காரணமாக அறிவுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலையில் அருவியில் தண்ணீர் வரத்து குறையாததால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, தற்காலிகமாக அருவியில் குளிக்க இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவியின் தண்ணீர் வரத்து குறைந்து சீரானதும் மீண்டும் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றனர்.