வைகை அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வைகை ஆற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்தது. நேற்று முன்தினம் அணையின் நீர்பிடிப்பு பகுதியான வருசநாடு, வைகையாறு, போடி கொட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.
இதனால், நேற்று முன்தினம் காலை 68.50 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், நேற்று காலை 69 அடியாகவும், மதியம் 2 மணிக்கு 69.55 அடியாகவும் உயர்ந்தது. அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியதும் 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உபரிநீர் முழுவதும் வெளியேற்றப்படுவது வழக்கம். அதன்படி, நேற்று இரவு அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியதும் அணைக்கு வந்த 7000 கனஅடி நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 70.01 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 6158 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து 7574 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 5820 மி.கனஅடியாக உள்ளது.