• Fri. Feb 14th, 2025

முதல் சட்டப்பேரவை பேரவை உரை – நன்றி தெரிவித்து உதயநிதி உருக்கம்!..

By

Aug 18, 2021

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞரை வணங்கி தனது முதல் சட்டப்பேரவை உரையை பதிவு செய்ததாக , சேப்பாக்கம் எம்.எல்.ஏ உதயநிதி தெரிவித்துள்ளார்.


இன்றைய சட்டமன்றத்தில் விவாதத்தின் போது சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தனது கன்னிப் பேச்சை பேசினார். இதுதான் அவரது முதல் சட்டசபை பேச்சாகும்.

முதல் பேச்சிலேயே, நீட் தேர்வு பற்றிதான் அதிகம் பேசினார். தமிழக மக்கள் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதா பெயரை அரியலூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு சூட்டவேண்டும் என்று உதயநிதி கோரிக்கை வைத்தார்.


இதற்கு பதில் அளித்து பேசினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். நீட் தேர்வு பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு அறிக்கையை ஆய்வு செய்து நடப்பு சட்டசபை கூட்டத் தொடரில், நீட் தேர்வுக்கு எதிராக சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் என்று உறுதியளித்தார் ஸ்டாலின். உதயநிதி ஸ்டாலினின் கன்னிப்பேச்சு கோரிக்கைக்கு உடனடியாக பதில் கிடைத்தது.


இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் அவரது முகநூல் பக்கத்தில், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞரை வணங்கி எனது முதல் சட்டப்பேரவை உரையை இன்று பதிவு செய்தேன். இந்த வாய்ப்பை வழங்கிய பேரவைத்தலைவர் அப்பாவு, முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் தொகுதி மக்கள் அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.