கழிவுப் பஞ்சுகளை அரைக்கும் ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான கழிவுப்பஞ்சுகள் இயந்திரங்கள் எரிந்துசேதமடைந்தன. ஒரு மணி நேரமாக தீயை அணைக்க பல்லடம் தீயணைப்பு துறை வீரர்கள் போராடி வருகிறார்கள்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மங்கலம் அக்ரஹாரபுத்தூர் பகுதியை சேர்ந்த பஷீர் அராஃபத் என்பவர் கழிவுப்பஞ்சுகளை அரைத்து நூல் தயாரிக்கும் ஆலையை நடத்தி வருகிறார்.
வாடகைக்கு கட்டிடம் எடுத்து கடந்த ஒன்றரை வருடங்களாக இந்த தொழிலை செய்து வருகிறார். இன்று பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, திடீரென கழிவு பஞ்சுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனில் தீ பற்றியது. தீ முழுவதுமாக பரவி கழிவு பஞ்சுகள் மற்றும் இயந்திரங்கள் அனைத்தும் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தன. உள்ளே பணியில் இருந்த தொழிலாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கூடுதலாக தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு காரணங்களால் தீப்பற்றியதா என மங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.