ராமேஸ்வரம் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று நிதியமைச்சர் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-26-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், “ மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு விமான நிலையம் முக்கியம் என்பது நன்கு அறிந்த அரசு, கோவை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப் பணிக்கு ரூ. 2ஆயிரத்து 938 கோடி மதிப்பிலான நிலத்தை கையகப்படுத்தி மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது. சேலம் விமான நிலையத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகின்றது. பரந்தூர் விமான நிலையப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தென் மாநிலங்களுக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகள் அதிகரித்து வரும் சூழலில், ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் பகுதியில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். 800 பணிபுரியும் பெண்கள் பயனடையும் வகையில் ரூ.77 கோடியில் மேலும் 10 இடங்களில் தோழி விடுதிகள் அமைக்கப்படும். சென்னை, கோவை, மதுரையில் தலா 1,000 மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.275 கோடியில் மாணவியர் விடுதிகள் கட்டப்படும்.
தமிழின் தலைச்சிறந்த 500 இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முதற்கட்டமாக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஓலைச்சுவடிகளை மின்பதிப்பாக்கம் செய்ய ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் இந்திய மற்றும் வெளிநாடு நகரங்களில் இந்தாண்டு முதல் தமிழ் புத்தக கண்காட்சி நடத்தப்படும். இதற்காக ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் இளம் தலைமுறையினருக்கு தமிழ் மரபை முறையாக அறிமுகம் செய்திடும் வகையில் தமிழ்மொழி மற்றும் நாட்டுப்புறக் கலைகளை பயிற்றுவிக்கும் சிறப்பு வகுப்புகள் அயலக தமிழர் நலவாரியம் மூலம் நடத்தப்படும் இந்த நேரடி வகுப்புகளுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.