
தமிழர்களின் பண்பாட்டு தலைநகரான மதுரை திருவிழாக்களின் திருவிழாவான சித்திரை திருவிழாவை கொண்டாடி முடித்திருக்கிறது. உலகில் வேறு எங்கும் இல்லாத ஒரு நிகழ்வு இத்திருவிழா.மதம்,சாதி, வேறுபாடுகளை கடந்து உலக தமிழர்களின் திருவிழாவாக சித்திரை திருவிழா வை சொல்ல முடியும்.
மதுரையின் நெடிய வரலாற்றில் பல அம்சங்களை தனதாக்கி கொண்ட திருவிழா சித்திரை திருவிழாவாகும். மனித ஆதி வழிபாட்டு முறையான பெண்தெய்வ வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக மீனாட்சியே இன்னும் மதுரையின் அரசியாக திகழ்கிறாள்.சமணம்,பெளத்தம் தளைத்தோங்கி இருந்த இடம் மதுரை.திருப்பரங்குன்றம் உள்ளிட்ட மதுரையை சுற்றியுள்ள மலைகளில் சமணர்கள் வாழ்ந்த குகைகளை இன்றும் காணலாம்.பின்னர் அந்தஇடத்தை சைவமும்,வைணவமும் பிடித்துக்கொண்டன.
சங்க இலக்கியங்களில் அழகர்கோயில்
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழவான அழகர் வைகை ஆற்றில் இறங்குதல். மற்ற கோயில்களில் கோயிலிருந்து சுவாமி எப்படி புறப்பாடாகி போகிறதோ அப்படியே திரும்புவது வழக்கம்.எந்த கோயிலிலும் இல்லாத நிகழ்வாக கள்ளழராக மதுரைக்குவரும் சுந்தராஜபெருமாள் பல அவதாரங்களை எடுக்கிறார். வைகை ஆற்றில் இறங்கி மீண்டும் அழகர் மலை திரும்பும் போது கள்ளழகராவே செல்கிறார்.
சங்க இலக்கியம் குறிப்பிடும் தலம்..

சங்க இலக்கியத்தில் பெயர் சூட்டப் பெறும் ஒரே ஒரு வைணவத் தலம் இதுவேயாகும். பரிபாடலில் புலவர் இளம்பெருவழுதியார் இத் தலத்தினை மாலிருங்குன்றம் என்று குறிப்பிடுகின்றார். தமிழின் முதல்காப்பியமான சிலப்பதிகாரம் இக்கோயில் அமைந்த மலையினைத் திருமால் குன்றம் என அழைக்கிறது .
பூதத்தாழ்வார் பெரியாழ்வார் ஆண்டாள் நம்மாழ்வார் திருமங்கையாழ்வார் 108 பாசுரங்களில் இக்கோயிலைக் குறித்துப் பாடுகின்றனர். பூதத்தாழ்வார் அழகர் கோயிலை இருஞ்சோலை மலை என்று குறிப்பிடும் பொழுது மற்ற ஆழ்வார்கள் திருமாலிருஞ்சோலை, மாலிருஞ்சோலை என்று குறிப்பிடுகின்றனர். ஆனால் இக்கோயில் சமணகோயிலாக இருந்திருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர் தோ.பரசிவம் தனது நூலில் குறிப்பிடுகிறார்.
கள்ளர் சமூகத்தோடு அழகர்கோயிலுக்கு உள்ள உறவு
வைணவ கடவுளான சுந்தரராஜ பெருமாளுக்கு அழகர் கோயிக்குள் வைதீக முறைப்படி வழிபாடு நடைபெறுகிறது.ஆனால் நாட்டு கள்ளர், இடையர், பள்ளர், பறையர் ஆகியோர் அழகர் கோயிலோடு கொண்டுள்ள உறவும் உண்டு.கிடா வெட்டும்,முடிகாணிக்கையும் செய்யும் வழிபாட்டு முறையும் கடைபிடிக்கப்படுகிறது.
அழகர்கோயில் இறைவன் கள்ளழகர் என்ற பெயரிலேயே அழைக்கப்படுகின்றார். மதுரைக்குச் சித்திரைத் திருவிழாவிற்கு அவர் பூண்டு வருகின்ற கோலம் கள்ளர் கோலம். தல்லாகுளம் பகுதியில் இந்தக் கோலம் களையப்பட்டு பெருந்தெய்வ வேடத்தைப் புனைந்து கொள்கிறார்.

அழகர் வைத்திருக்கும் வளரி ஆயுதம்.
கள்ளர் திருக்கோலத்தில் அழகர் வளரி ஆயுதம் வைத்திப்பார்.அது
கள்ளர் சமூகத்தினர் பயன்படுத்திய ஓர் ஆயுதம். 1801 இல் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் போது இந்த ஆயுதம் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டது. மதுரை நாயக்கர் அரசு கடைசிவரை வெற்றி கொள்ளாதது கள்ளர் சமூகத்தை தான். இவர்களோடு சமரசம் செய்யும் விதமாக அழகர்கோயில் திருவிழாவை மதுரை மீனாட்சி திருவிழாவையும் இணைத்தார் மன்னர் திருமலை நாயக்கர்.
மண்டூக முனிவருக்கு சாபவிமோசன் தருவதற்காக மதுரைக்கு அழகர் வந்ததாக ஒரு கதை உண்டு .மோர் குடித்துவிட்டு காசுகொடுக்காமல் கள்ளர் வேடமிட்டு தப்பிவிட்டார் அழகர் என ஒருகதையும் உண்டு.
ஒருமுறை அழகர் மதுரைக்குச் சித்திரைத் திருவிழாவிற்காக வந்துகொண்டிருந்தார். வழியில் களைப்பு தீர தல்லாகுளம் மாரியம்மன் கோயில் அருகில் ஓர் இடைச்சி மோர் விற்றுக் கொண்டிருந்தார். அவளிடம் மோர் வாங்கி குடித்தார் அழகர். திருவிழா முடிந்து திரும்பும்போது குடித்த மோருக்குக் காசு தருவதாக சொன்னார். ஆனால் ஊர் திரும்பும்போது கையில் காசில்லாததால் கள்ளர் வேடம் போட்டுக் கொண்டு தப்பியோடி விட்டார்.கள்ளர் வேடக் கதை இது. இது போன்ற பல கதைகள் உண்டு என்கிறார் ஆய்வாளர் தொ. பரமசிவன் .
இப்படி பல கதைகள்,நம்பிக்கைகள்,விழிபாட்டு முறைகள்,வைதீக நம்பிக்கைகள் ,வரலாறு ,கதைகள் என பல நிகழ்வுகளின் இணைப்பே சித்திரை திருவிழாவும்,கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வும்.மதுரையின் ஒவ்வொரு தெருவும் பல வரலாற்றை கொண்டுள்ளது….

