

தமிழ்நாட்டில் உள்ள 40 சுங்கச் சாவடிகளில் இன்று (ஏப்ரல் 1) முதல் சுங்கக் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.
தமிழ்நாட்டில் 78 சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 1992-ம் ஆண்டு போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் 1-ம் தேதியும், 2008-ம் ஆண்டு போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் 1-ம் தேதியும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதன்படி, ஏப்ரல் 1-ம் தேதி முதல் சுங்கச்சாவடியில் 5 முதல் 10 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிக்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது.

அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 78 சுங்கச் சாவடிகளில் 40 சுங்கச் சாவடிகளில் முதல் சுங்கக் கட்டண உயர்வு இன்று அமலுக்கு வந்தது. 5 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையை அடுத்த பரனூர் சுங்கச்சாவடி, திண்டிவனம்-ஆத்தூர், நெல்லூர், நாங்குநேரி, சென்னை- பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், பட்டறைப்பெரும்புதூர் சுங்கச்சாவடி, பள்ளிக்கொண்டா, புதுக்கோட்டை-வாகைகுளம், எஸ்வி புரம், சாலைபுதூர், செண்பகம்பேட்டை, வானகரம், சூரப்பட்டு, திருப்பாச்சேத்தி, வாணியம்பாடி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

