• Fri. Apr 19th, 2024

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Feb 27, 2023

சிந்தனைத்துளிகள்
நம்பிக்கையை மட்டும் இழந்து விடாதே!

ஒரு வேடனுக்கு யானை வளர்ப்பது என்றால் கொள்ளை ஆசை. அவன் பல இடங்களில் குழிவெட்டி உள்ளே விழும் குட்டி யானைகளைப் பிடித்து, இரும்புச் சங்கிலியில் பிணைத்து, பெரிய மரங்களில் கட்டி விடுவான். அவை பிளிறிப் பார்க்கும், தப்பிக்க முயற்சிக்கும். ஆனால், காலப்போக்கில் அவ்வாறு முயற்சிப்பதில் எந்த பலனும் இல்லையென நம்பிக்கையை இழந்து விடும்.மேலும்
அவற்றுக்கு அவ்வப்போது சாப்பாடு வந்து விடும். அதை விரும்பி சாப்பிடும் குட்டிகள் கொஞ்ச நாளில் சமாதானமாகி விடும்.
வளர்ந்து பெரிதாகி விடவும் செய்யும். இதன்பிறகு, வேடன் அவற்றை சங்கிலியில் இருந்து விடுவித்து கயிற்றில் கட்டி விடுவான். யானைகளும் இனி தப்பித்து என்னாகப் போகிறது என அங்கேயே நின்றுவிடும்.
ஒருமுறை, தன் மகனுடன் வேட்டைக்கு வந்த ஒரு அரசன், “குட்டி யானைகளை சங்கிலியிலும், பெரிய யானைகளைக் கயிற்றிலும் பிணைத்துள்ளாயே! பெரிய யானைகள் கயிற்றை எளிதாக அறுத்து விடுமே!” என்று வேடனிடம் கேட்டான்.
“மன்னா! கயிற்றில் பிணைக்கப்பட்ட இந்த யானைகள், குட்டியாக இருந்த போது சங்கிலியில் தான் பிணைக்கப்பட்டிருந்தன. இப்போது அவற்றுக்கு இவ்விடம் பழகி விட்டதால், பெரிதான பிறகும், வேறிடத்துக்குப் போய் என்ன செய்யப் போகிறோம் என நம்பிக்கையை இழந்து விட்டன. எனவே, கயிற்றில் பிணைத்துள்ளேன்,” என்றான். இந்த யானைகளைப் போல், நம்பிக்கையை மட்டும் இழந்து விடவே கூடாது. இலக்கை எட்ட ஆரம்பத்தில் என்ன முயற்சி எடுத்தோமோ, அதை விட அதிக முயற்சி எடுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *