சிந்தனைத்துளிகள்
நாம் வாழும் காலம் குறைவு. அதற்குள் அந்த வாழ்க்கையை வாழ்ந்து விட வேண்டும்.. அதுவும் நமக்குப் பிடிச்ச மாதிரி.. .மனது விரும்புவதற்கேற்ப அதை வாழ வேண்டும். மற்றவர்களுக்காக நீங்கள் உங்கள் வாழ்க்கையை வாழ முடியாது.. உங்களுக்காக வாழுங்கள்.. என்று சொல்கிறார் ஸ்டீவ் ஜாப்ஸ்..
உண்மைதானே! உன் வாழ்க்கை உன் கையில் என்பது போல கிடைத்த வாழ்க்கையை அணு அணுவாக ரசித்து வாழ வேண்டும். உங்களுக்குப் பிடித்தவருடன் உங்களுக்குப் பிடித்தது போல் வாழும் போது அதன் சுகமே தனி தான். காலையில் எழுந்தது முதல் இரவு தூங்குவதற்கு முன் வரை ஒரு நாள் உங்களுக்குப் பிடித்தாற்போல வாழ்ந்து பாருங்களேன். அப்பொழுது தான் நம் மனம் நிறைந்திருக்கும்.
எத்தனையோ வழிகள் உண்டு நமக்குப் பிடித்தது போல் வாழ்வதற்கு ஆனால் நாம் தான் அதைக் கண்டுபிடிக்காமல் ஏதேனும் ஒன்றை நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அடுத்த வேளை உணவுக்குக் கூட வழியில்லாமல் இருக்கும் மனிதனிடம் இருக்கும் நிம்மதி கூட ஏனோ மாடமாளிகைகளில் வாழும் மக்களுக்கு ஏனோ இருப்பதில்லை.
இரவு பகலாகப் பொருள் ஈட்டுவதற்காக ஓடும் நீங்கள் உங்களுக்காக மாதத்தில் ஓர் நாள் செலவிடலாமே. கிடைத்தற்கரிய உங்கள் மழலைச் செல்வங்களின் அன்பிலும், பெற்றோர்களின் அன்பிலும் நனையலாமே. உங்களுக்குப் பிடித்த உடை அணிந்து, பிடித்த உணவு உண்டு, பிடித்த இடத்திற்குச் சென்று மகிழ்ச்சியாக இருக்கலாமே.